

இடைத்தேர்தல் முடிவுகளைக் கொண்டு பாஜகவின் பலத்தை மதிப்பிடக் கூடாது. வரவிருக்கின்ற நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மீண்டும் பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஆவேசமாக பேசினார்.
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். பாஜக தேசிய துணைத் தலைவர் எடியூரப்பா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, அனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அசாமிலும் மேற்கு வங்கத்திலும் பாஜக தனது வெற்றிக் கணக்கை தொடங்கி இருப்பதை காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் வசதியாக மறந்துவிட்டன. இடைத்தேர்தல் முடிவுகளைக் கொண்டு பாஜகவின் பலத்தை மதிப்பிடக் கூடாது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற மாபெரும் வெற்றியை யாரும் மறந்துவிடக்கூடாது. அதே போன்ற வெற்றியை வரவிருக்கிற ஹரியாணா,மகாராஷ்டிரம், ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஜார்க் கண்ட் தேர்தலில் மீண்டும் பெறுவோம். ஹரியாணாவிலும் மகாராஷ்டிரத்திலும் பாஜக தனிப் பெரும்பான்மை பெறும். அந்த தேர்தலில் காங்கிரஸ் காணாமல் போகும்.
மன்மோகன் சிங்கின் ஆட்சியில் தடுமாறிய நாட்டை, பிரதமர் மோடி மிகச் சிறப்பான வழியில் ஆட்சி செய்கிறார். இரும்புக்கரம் கொண்டு இந்தியாவை ஒருங் கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் வழியில் பயணித்து காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இந்தியாவுடனும், காஷ்மீர் பிரிவினைவாதிகளுடனும் ஒரே நேரத்தில் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. மோடி தலைமையிலான அரசு அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தவே விரும்புகிறது. அதே நேரத்தில் நம் நாட்டின் பாது காப்பை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது.
கர்நாடகத்தில் மீண்டும் பாஜக
பிரதமர் மோடியின் நிலையான ஆட்சி தொடர வேண்டு மானால் தலைவர்களும் தொண்டர் களும் அவருடைய கரங்களை வலிமைப்படுத்த வேண்டும். அவருடைய நல்லாட்சி தொடர்ந் தால் மீண்டும் கர்நாடகத்தில் பாஜக கொடி பறக்கும். அனைவரும் கோஷ்டி பூசல்களை மறந்து கட்சி வேலையை பார்த்தால் அண்டை மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும்'.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.