

தீவிரவாத இயக்கங்களின் சொந்துக்களை முடக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்க கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
‘‘ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாத இயக்கம் 2002-ம் ஆண்டிலேயே சட்ட விரோதமானது என பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டு விட்டது. எனினும் அந்த அமைப்பு பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு தீவிரவாத இயக்க பட்டியலில் ஜெய்ஷ் -இ- முகமது இயக்கத்தை சேர்த்துள்ளது. ஜெய்ஷ் - இ -முகமது அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முழு ஆதரவை அமெரிக்கா அளிக்கும்
பாகிஸ்தான் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். தீவிரவாத அமைப்புகளுக்கான நிதி மற்றும் பொருளாதார ஆதரவு தருவதை உடனடியாக பாகிஸ்தான் முடக்க வேண்டும். தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதுடன், அவர்கள் நிதி திரட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்”எனக் கூறினார்.
முன்னதாக, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, புல்வாமா துயர சம்பவத்துக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது, எந்தவொரு நாடும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது என தெரிவித்தார்.