

வரும் 21-ம் தேதி முதல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா உ.பி.யில் சுற்றுப்பயணம் தொடங்குவதாகத் தெரியவந்துள்ளது. அந்த நாளில் உ.பி.யின் பிரயாக்ராஜில் உள்ள முக்கூடல் சங்கமத்தில் புனித நீராட உள்ளார்.
கடந்த வாரம் உ.பி.யில் மூன்று தினங்கள் முகாமிட்டிருந்த பிரியங்கா வதேரா, தனது பொறுப்பில் இருக்கும் கிழக்குப்பகுதியின் காங்கிரஸாரை சந்திக்க முடிவு செய்தார். இப்பகுதியில் அமைந்துள்ள உ.பி.யின் 42 மக்களவைத் தொகுதிகளின் வெற்றி பிரியங்காவின் பொறுப்பில் உள்ளது.
இதற்காக, முதலில் அத்தொகுதியில் வெற்றிக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளார் பிரியங்கா. இத்துடன் அதன் காங்கிரஸாரையும் நேரில் சந்தித்து உற்சாகப்படுத்த வேண்டி தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.
பிப்ரவரி 21-ல் புனித நீராடலுக்குப் பின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தன் கொள்ளுத்தாத்தாவான ஜவஹர்லால் நேருவின் வீட்டிற்கும் விஜயம் செய்ய இருக்கிறார். நேரு பவனுக்குப் பின் அதே நாள் மாலை வாரணாசிக்குச் செல்கிறார் பிரியங்கா. இங்கு மூன்று நாள் தங்கியபடி அப்பகுதியின் சுற்றுப்புறம் உள்ள தொகுதிகளில் பயணம் செய்கிறார். அப்போது, புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பத்தினர் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூற உள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ''இப்பயணத்தின் போது முக்கிய நகரங்களின் சாலைகளில் வாகன ஊர்வலம் சென்று கட்சியினர் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வாரணாசியின் காசி விஸ்வநாத் கோயிலுக்கும் பிரியங்கா செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி 11-ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் உ.பி. மேற்கு பகுதி பொறுப்பு பொதுச்செயலாளர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா ஆகியோருடன் லக்னோ வந்த பிரியங்காவிற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இதைப்போலவே, இந்த முறையும் அளிக்க காங்கிரஸார் திட்டமிட்டுள்ளனர்.
உ.பி.யின் தனது பயணத்திற்குப் பின் குஜராத்தின் அகமதாபாத்தில் பிப்ரவரி 28-ல் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் நிர்வாகக்குழு கூட்டத்தில் பிரியங்கா பங்கேற்கிறார். இவரைப்போல், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் உ.பி. மேற்கு பகுதியில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.