Last Updated : 28 Jan, 2019 11:53 AM

 

Published : 28 Jan 2019 11:53 AM
Last Updated : 28 Jan 2019 11:53 AM

இந்து பெண் மீது வைத்த கை இருக்கக் கூடாது; மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைப் பேச்சு: கர்நாடக காங்கிரஸ் தலைவருடன் மோதல்

இந்து பெண் மீது வைக்கும் கை இருக்கக்கூடாது என்று சர்ச்சையாகப் பேசிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவுடன் ட்விட்டரில் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அமைச்சரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவருமான அனந்தகுமார் ஹெக்டே குடகு மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பேசுகையில், " நம்முடைய சமூகத்தில் உள்ள முன்னுரிமைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். சாதியைப் பற்றி நாம் சிந்திக்கக்கூடாது. இந்து பெண் ஒருவரை யாரேனும் தொட்டால், தொட்ட கை இருக்கக்கூடாது" எனப் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பங்கேற்றார். அப்போது கூட்டத்தினர் மத்தியில் அவர் பேசுகையில், " தாஜ்மஹால் முஸ்லிம்களால் கட்டப்படவில்லை. அது உறுதியாக முஸ்லிம்களால் கட்டப்பட்டிருக்க முடியாது என்று வரலாறு கூறுகிறது.  ஷாஜகான் தனது சுயசரிதையில்  தாஜ்மஹால் குறித்து குறிப்பிடுகையில், அரசர் ஜெயசிம்மாவிடம் இருந்து இதை வாங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.  மன்னர் பரமதீர்த்தா என்பவர் இதை சிவன் கோயிலாகக் கட்டினார். இதற்கு பெயர் தேஜோ மகாலயா. தேஜோ மகாலயா என்பதுதான் தாஜ் மஹால் என்று பெயர் மருவியது. நாம் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்தால், நம் வீடுகளின் பெயரும் மாற்றப்படும் எனப் பேசினார்.இதுவும் சர்ச்சையானது.

மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார். அவர் ட்விட்டரில் எழுப்பிய கேள்வியில் " மத்திய அமைச்சராக நீங்கள் வந்து என்ன சாதித்துவிட்டீர்கள், எம்.பி.யாக இருந்து இந்த மாநிலத்துக்கு என்ன செய்தீர்கள்.  கர்நாடக மாநில வளர்ச்சிக்கு  என்ன பங்களிப்பு ஆற்றினீர்கள். ஆனால், மக்களால் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.யானவர்கள் இவ்வாறு பேசுவது வருந்தத்தக்கது" எனத் தெரிவித்தார்.

அதற்கு ஆனந்தகுமார் ஹெக்டே பதில் அளித்து செய்த ட்வீட்டில் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து தவறாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பதில் அளித்து செய்த ட்வீட்டில் " இந்த நபர் கேட்ட கேள்விகளுக்கு நிச்சயம் நான் பதில் அளிக்கிறேன். அதற்கு முன்னதாக இந்த கேள்வியைக் கேட்டவர் யார் என்பதை தெரிந்துகொள்ளலாமா. ஒரு முஸ்லிம் பெண் பின்னால் சுற்றித் திரிந்தவர்தான் இந்தக் கேள்வியை கேட்டுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் குண்டுராவ் வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், "அனந்தகுமார் ஹெக்டே இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து பேசியது வருத்தம் அளிக்கிறது. என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை இப்படி தரம் தாழ்ந்து பேசுகிறார். இதுதான் அவரின் கலாச்சாரம். இந்து கலாச்சாரத்தில் இருந்து, நூல்களில் இருந்து அவர் முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை. காலம் கடந்துவிடவில்லை, அனைவரும் மதிக்கும் வகையில் மனிதராக மாற முயற்சிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது முதல் முறையல்ல. இதற்கு முன் சபரிமலை விவகாரத்தில் பேசுகையில், கேரள அரசு சபரிமலை விவகாரத்தில் இந்துக்களை பட்டப்பகலில் பலாத்காரம் செய்கிறது என்று சர்ச்சையாகப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x