Published : 14 Jan 2019 12:08 PM
Last Updated : 14 Jan 2019 12:08 PM

மோடியின் வருகைக்காக 1000 மரங்கள் வெட்டி அழிப்பு: ஒடிசாவில் ஹெலிபேட் அமைக்க ஏற்பாடு

ஒடிசாவுக்குப் பிரதமர் மோடி வர உள்ள நிலையில், பாலங்கிர் நகரில் ஹெலிபேட் அமைப்பதற்காக ஆயிரக்துக்கும் அதிகமான மரங்கள் முன் அனுமதியின்றி வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் செயல்பாடு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஒடிசாவுக்கு நாளை செல்கிறார். ஒடிசா மாநிலத்தின் பாலிங்கிர் மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

ஒடிசாவுக்கு வரும் பிரதமர் மோடி, குர்தா-பாலிங்கர் இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பயணிக்கும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஹெலிபேட் அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 2.26 ஏக்கர் பரப்பளவில் ரயில்வே துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டன.

தற்போது ரயில்வே பராமரித்து வளர்த்துவரும் மரங்கள் இருக்கும் பகுதியில் ஹெலிபேட் அமைக்க இருப்பதால், ஏறக்குறை. 1.26 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பிஸ்வாஜித் மொகந்தி கூறுகையில், “ முன் அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சிறிய இடத்தில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்குக்கூட வனத்துறையினரிடம் அனுமதி பெறப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட எந்த அனுமதியும் பெறவில்லை. காடு வளர்ப்புத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அதை வெட்டுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை. இந்த மரங்களை வெட்டியவர்கள் மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்தார்.

அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டதா என்பது குறித்து பாலிங்கர் மாவட்ட வனச்சர அதிகாரி சமிர் குமார் சத்பதியிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், “ அனுமதியின்றிதான் அனைத்து மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. எங்களிடம் மரங்கள் வெட்டுவது குறித்து எந்த முன் அனுமதியும் பெறவில்லை. இதுவரை 1200 மரங்களை வெட்டியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இந்த 1.25 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த மரங்கள் அனைத்தும் சராசரியாக 4 அடி முதல் 7 அடிவரை வளர்ந்து 90 சதவீதம் வளர்ச்சியை எட்டி இருந்த நிலையில், இப்போது மரங்கள் அனைத்தும் ஹெலிபேட் அமைக்க அழிக்கப்பட்டுள்ளன.

பாலிங்கர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கே. சிவ சுப்பிரமணி கூறுகையில், “ பிரமதர் மோடியின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு எங்கும் இடமில்லை. மரங்களை வெட்டினால்தான் இடம் கிடைக்கும் என்பதால் வெட்டினார்கள் “ எனத் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “பிரதமர் மோடியின் வருகை பிடிக்காமல், அச்சமடைந்து ஒருசிலர் வனத்துறை அதிகாரிகள் மூலம் அவதூறுகளைப் பரப்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x