நெதர்லாந்து பாணியில் உத்தரப் பிரதேசம்: சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க முதல்வர் அகிலேஷ் திட்டம்

நெதர்லாந்து பாணியில் உத்தரப் பிரதேசம்: சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க முதல்வர் அகிலேஷ் திட்டம்
Updated on
2 min read

நெதர்லாந்து பாணியில் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

சமீபத்தில் நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்று வந்த உ.பி. முதல்வர் அகிலேஷ், உபியில் முதலீடு செய்வது குறித்து அங்குள்ள பல நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் நெதர்லாந்தை போல் உ.பி.யிலும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, நெதர்லாந்து தூதர் அல்போன்ஸஸ் ஸ்டோலிங்கா தலைமையிலான குழுவினர் உபிக்கு வந்து நேற்று முன்தினம் அகிலேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்புக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி, உ.பி.யில் முதல் கட்டமாக சில முக்கிய நகரங்களில் அறுபது கி.மீ. தொலைவுக்கு சைக்கிள்களுக்காக பிரத்யேக பாதை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் ராமா ராமன் கூறும்போது, “முதல்வரின் திட்டமான இது, முதல்கட்டமாக ஆக்ரா, நொய்டா, லக்னோ உட்பட மூன்று நகரங்களில் செயல்படுத்தப்படும். இதன்படி, சைக்கிள்களுக்கு என சாலை ஓரங்களில் தனிப்பாதை மற்றும் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும். இந்த திட்டத்தை ஊக்குவிக்க நெதர்லாந்து வல்லுநர் குழு நமக்கு உதவும்” என்றார்.

மற்ற வாகனங்களுக்கு தடை

முதல் கட்டமாக நொய்டாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் சைக்கிளை தவிர வேறு வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து உ.பி. அரசு ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, கவுதம் புத்தர் பல்கலைக்கழகத்தில் இந்தத் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அப்பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜே.பி.சர்மா உ.பி. அரசுக்கு உறுதி அளித்துள்ளார்.

நெதர்லாந்து உதாரணம்

உலகிலேயே முதன்முறையாக நெதர்லாந்தில் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் பலனாக அங்கு இப்போது 27 சதவிகித அளவுக்கு பொதுமக்களின் போக்குவரத்து சாதனமாக சைக்கிள்கள் பயன்படுத்தப் படுகின்றன. குறிப்பாக, தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மட்டும் சைக்கிள் பயன்பாடு 38 சதவிகிதமாக உள்ளது.

சைக்கிள் மீதான வரி குறைப்பு

சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, அதன் மீதான மாநில அரசின் வாட் வரியை நீக்கி உத்தரவிட்டுள்ளார் அகிலேஷ். இதுகுறித்து உ.பி. அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாநிலத்தின் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் என பெரும்பாலானவர்கள் சைக்கிள்களை நகரம் மற்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சைக்கிளுக்கு வாட் வரி நீக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி ரூ.3,500-க்கும் குறைவான விலையில் சைக்கிள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமாஜ்வாதியின் சின்னம் சைக்கிள்

சமாஜ்வாதி கட்சியின் சின்னமாக சைக்கிள் இருப்பதால், முதல்வர் அகிலேஷ் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. தனது சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக, தேர்தல் காலங்களில் சைக்கிள் யாத்திரையை தொடங்கி நடத்தி வந்த இவர், தற்போது அரசு செலவிலேயே இதைச் செய்ய முயல்வதாகவும் குற்றச் சாட்டுகள் எழத் தொடங்கி உள்ளன. உ.பி.யின் முன்னாள் முதல்வர் மாயாவதியும் ஆட்சியில் இருந்த போது, நொய்டா மற்றும் லக்னோவில் மாபெரும் பூங்காக்களை ரூ.2 ஆயிரம் கோடியில் உருவாக்கி, அதில் சிறியது முதல் பெரியது வரையிலான யானை சிலைகளை அமைத்தார். இது அப்போது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in