Last Updated : 16 Jan, 2019 02:03 PM

 

Published : 16 Jan 2019 02:03 PM
Last Updated : 16 Jan 2019 02:03 PM

சூடாகும் கர்நாடக அரசியல்: பாஜக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டல் முன் காங்கிரஸ் போராட்டம்; ஆட்சிக்குப் பாதிப்பில்லை - குமாரசாமி நம்பிக்கை

ஹரியாணாவில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் முன் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருவதால், இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள்.

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு தற்போது 104 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

பாஜக எம்எல்ஏக்கள் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய மாநாட்டில் பங்கேற்க கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி சென்றனர்.

கர்நாடகாவில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு டெல்லி அருகே உள்ள குருகிராம், நொய்டாவில் உள்ள ஓட்டல்களில் பாஜக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சுயேட்சை எம்எல்ஏ எச் நாகேஷ், கேபிஜேபி கட்சியைச் சேர்ந்த ஆர்.சங்கர் ஆகியோர் காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெற்று தங்களின் முடிவைக் கடிதம் மூலம் ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் கர்நாடக அரசியலில் அடுத்தசில நாட்களில் ஏதேனும் திருப்பம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதற்குஏற்றார் போல், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா பேசுகையில், ''மாநிலத்தில் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்தால், ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும்'' எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தொண்டர்களிடம் பேசுகையில், ''அடுத்த சில நாட்களில் பாஜக தொண்டர்கள் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்'' எனக் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஹரியாணாவில் உள்ள குர்கான் நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டல் முன் இன்று காலை இளைஞர் காங்கிரஸார் 20க்கும் மேற்பட்டோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், ''பாஜக அரசமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை, ஜனநாயகத்தைக் கொலை செய்கிறது'' என்று கோஷமிட்டதால் சலசலப்பு நிலவியது.

இதற்கிடையே கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் ஹோட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எம்எல்ஏக்களின் செல்போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமியிடம் ஆளும் கட்சிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ''எங்களின் கூட்டணி அரசு எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் செல்கிறது. நாங்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடனும், எங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை. ஆட்சிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x