போலி அறிவியலைப் பிரபலப்படுத்துவதா? ஆந்திரப் பல்கலை. துணைவேந்தருக்கு அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு கண்டனம்

போலி அறிவியலைப் பிரபலப்படுத்துவதா? ஆந்திரப் பல்கலை. துணைவேந்தருக்கு அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு கண்டனம்
Updated on
1 min read

போலி அறிவியலைப் பிரபலப்படுத்திய ஆந்திரப் பல்கலை. துணைவேந்தர்  டாக்டர் ஜி. நாகேஷ்வர ராவ் தன் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.சாட்டர்ஜி, பொதுச் செயலாளர் பேராசிரியர் பொ.ராஜமாணிக்கம், பொருளாளர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி  ஆகியோர் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ''தற்போது ஜனவரி 3-ம் தேதி முதல் ஜலந்தரில் நடந்து கொண்டிருக்கும் இந்திய அறிவியல் மாநாட்டின் ஒரு நிகழ்வில் மிகப்பெரிய போலி அறிவியல் பிரச்சாரம் நடந்திருப்பது இந்திய அறிவியலுக்கு மிகப் பெரிய அவமானத்தைத் தரக் கூடியதாக அமைந்துள்ளது.

குறிப்பாக ஆந்திரப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் டாக்டர் ஜி. நாகேஸ்வரராவ், கவுரவர்கள் டெஸ்ட் டியூப் குழந்தைகள் என்றும் ராவணன் பல்வகையான விமானங்கள் வைத்திருந்தததாகவும் இலங்கையில் பல ஏர்போர்ட்டுகள் இருந்ததாகவும் இவையனைத்தும் இந்தியாவின் தொன்மை அறிவியலுக்கான பெருமைமிகு சான்றுகள் எனக் கூறியுள்ளார்.

இதுபோன்ற போலிஅறிவியல் கருத்துகளை ஏற்கெனவே இந்தியப் பிரதமர் முதல் பிற அமைச்சர்களும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். இப்பிரச்சாரத்தை அவர்களின் மதவாத அரசியலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பல ஆய்வறிஞர்களை உருவாக்கியவரும் பல ஆய்வுக் கட்டுரைகளுக்கு தேர்வாளராகவும் பல ஆராய்ச்சிகளுக்குத் தலைவராகவும் செயல்பட்டுவரும் தலைசிறந்த ஆந்திரப் பல்கலைக்கழகத்தின துணைவேந்தர் போலி அறிவியலை முன்னிறுத்தி குழந்தைகளிடம் பேசியது வேதனைக்குரியது.

குறிப்பாக குழந்தை விஞ்ஞானிகள் மத்தியில் ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஜி. நாகேஷ்வர ராவ் பேசியிருப்பது கண்டனத்துக்குரியதாகும். இந்த குழந்தை விஞ்ஞானிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கள அளவில் அறிவியல் வழிமுறையில் ஆய்வு செயது புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி பல மட்டங்களில் தேர்வு பெற்று அகில இந்திய மாநாட்டிற்கு வந்தவர்கள் ஆவர். அவர்களின் அறிவியல் சிந்தனைகளை முடமாக்கும் போலி அறிவியலைப் பிரபலப்படுத்திய துணைவேந்தர் தார்மீக ரீதீயாக பதவியை ராஜினமா செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.  அல்லது ஆந்திராவின் வேந்தரான ஆளுநர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் இது போன்ற போலி அறிவியல் கருத்துகள் கொண்ட உரைகள் இடம் பெறும் அளவிற்கு அக்கறையின்றி செயல்பட்ட இந்த மாநாட்டின் பொறுப்பாளர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in