குதிரை பேரத்தில் ஈடுபடுவது குமாரசாமிதான்; நாங்கள் அல்ல: எடியூரப்பா தாக்கு

குதிரை பேரத்தில் ஈடுபடுவது குமாரசாமிதான்; நாங்கள் அல்ல: எடியூரப்பா தாக்கு
Updated on
1 min read

குதிரை பேரத்தில் ஈடுபடுவது குமாரசாமிதான் நாங்கள் அல்ல என்று கர்நாடகா பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. முதல்வர் குமாரசாமிதான் எங்களது எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்க நேரடியாக பணமும், பதவியும் தரும் வேளையில் ஈடுபட்டிருக்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மூவரின் மும்பை பயணத்துக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்றார்.

குருகிராமில் முகாம்:
இதற்கிடையில் பாஜக எம்.எல்.ஏ.,க்கள் குருகிராமில் முகாமிட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் தொடர்பாக தாங்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், இது குறித்து கர்நாடக மாநிலத்தின் பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறும்போது, "குமாரசாமியே தனது வாயால் தான் பாஜக எம்.எல்.ஏ.,க்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். எங்கள் எம்.எல்.ஏ.,க்களின் எண் பலத்தை காக்க வேண்டிய கடமை உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பாக தங்கவைத்துள்ளோம்" என்றார்.

குமாரசாமி பலம் என்ன?

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி நடத்துகின்றன. குறைந்த தொகுதிகளிலேயே வென்றாலும்கூட பாஜகவை ஆட்சி அமைக்கவிடக்கூடாது என்பதற்காக மஜதவின் குமாரசாமியை முதல்வராக்கி ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னதாக,  சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களான எச்.நாகேஷ், ஆர்.சங்கர் ஆகியோர் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். இந்த முடிவை அவர்கள் ஆளுநருக்கும் கடிதம் மூலமாக தெரிவித்தனர். ஆனால், வாபஸுக்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இதனால், கர்நாடக எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 119-லிருந்து 117 ஆக குறைந்திருக்கிறது. ஏற்கெனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலரை தன்வசம் இழுக்க முயற்சி நடப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் விலகல் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவையின் உறுப்பினர் பலம் 223. இதில் 37 பேர் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 80. கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை எண்ணிக்கை 113. இப்போதைக்கு குமாரசாமியின் பலம் 117 எம்.எல்.ஏ.,க்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in