

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிமனிதர்களுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ளதால், நடுத்தர குடும்பத்து மக்களின் ஆதரவைப் பெறும் வகையில், பாஜக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனத் தெரிகிறது.
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிக்கலாம் என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு கோரியுள்ளது.
இதன் மூலம், 80சியின் கீழ் வரும் செலவினங்களுக்கான வரம்பை ரூ.2.50 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை விடுத்திருந்தது. ரூ.5 லட்சம் வருவாய் ஈட்டும் ஒரு நபர், மருத்துவ மற்றும் போக்குவரத்துச் செலவினங்களாக தனது வரித் தொகையிலிருந்து ரூ.40,000 வரையில் கழித்துக் கொள்ள வழிவகை உள்ளது. இதை ரூ.2.5 லட்சமாக உயர்த்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்ந்த வருமானம் ஈட்டுவோருக்கு வருமானவரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும், மருத்துவச் செலவுகள், போக்குவரத்து படிகளை அளிக்க வேண்டும் என்றும் தொழிற்கூட்டமைப்பு மத்திய அரசுக்கு பட்ஜெட்டுக்கு முந்தைய தனது பரிந்துரைகளாக அளித்திருந்தது.
தற்போது . ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோர் 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானம் பெறுவோர் 30 சதவீதமும் வருமானவரி செலுத்துகின்றனர்.