Last Updated : 07 Jan, 2019 03:26 PM

 

Published : 07 Jan 2019 03:26 PM
Last Updated : 07 Jan 2019 03:26 PM

அனில் அம்பானியின் நலனுக்காக எச்ஏஎல் நிறுவனத்தை அழிக்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி தாக்கு

தொழிலதிபர் அனில் அம்பானியின் நலனுக்காக அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பலவீனப்படுத்தி, அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாஜக அரசு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் கடந்த வாரம் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே நீண்ட வாதம் நடந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''தொழிலதிபர் அனில் அம்பானியின் நலனுக்காக அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தி அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரத்து 700 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வைத்துள்ளது. அதை இன்னும் மத்திய அரசால் கொடுக்க முடியவில்லை.

ஆனால், ரஃபேல் விமானம் கொள்முதலுக்காக ரூ.20 ஆயிரம் கோடியை டசால்ட் நிறுவனத்துக்கு அரசு கொடுத்துள்ளது. ஆனால், இன்னும் ஒரு ரஃபேல் போர் விமானம் கூட இந்தியாவுக்கு வரவில்லை.

மத்திய அரசின் நோக்கம் என்பது, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பலவீனப்படுத்த வேண்டும், அதற்கு பணம் ஏதும் கொடுக்கக்கூடாது, அனில் அம்பானிக்கு பரிசளிக்க வேண்டும். ஆனால், மக்களின் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை , மோடியின் நண்பர் அனில் அம்பானி எடுத்துக்கொள்ள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க எனக்கு 15 நிமிடங்கள் கொடுங்கள். இந்த நாடு உண்மையை அறிந்து கொள்ளும். ரஃபேல் விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலைக் கொடுத்துள்ளார்''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

முன்னதாக,  ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், ''இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை ஊதியம் கொடுக்கக்கூட பணம் இல்லாமல் செய்து, பலவீனப்படுத்தி, அங்கு பணியாற்றும் சிறந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்களை அனில் அம்பானி நிறுவனத்துக்கு மாற்ற அரசு முயற்சிக்கிறது.

எச்ஏஎல் நிறுவனம் ஊதியம் கொடுக்க பணம் இல்லாமல் தவிப்பது வியப்பல்ல. அனில் அம்பானியிடம் ரஃபேல் இருக்கிறது. ஊதியம் இல்லாதபோது, வேறு வழியின்றி எச்ஏஎல் நிறுவன ஊழியர்களை நிர்பந்தத்துடன் அனில்அம்பானி நிறுவனத்துக்கு மாறுவார்கள்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x