மகாத்மா காந்தியின் வாழ்க்கையை போற்றிய நாட்டின் 70-வது குடியரசு தின விழா கோலாகலம்

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை போற்றிய நாட்டின் 70-வது குடியரசு தின விழா கோலாகலம்
Updated on
2 min read

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப் பானது மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக அமைந்திருந்தது.

நாட்டின் 70-வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லியிலுள்ள ராஜபாதையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் ரமபோசா கலந்துகொண் டார். அணிவகுப்பின்போது இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படை வீரர்கள் மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் வீரர்கள் கம்பீரமாக வந்தனர். அதிநவீன டி90 பீஷ்மா ரக கவச வாகனம் மற்றும் கே 9, வஜ்ரா-டி பீரங்கிகள் உள்ளிட்டவை அணிவகுப்பில் பங்கேற்றன.

இதைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை விளக்கும் வகையிலான, அலங்கார வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

அணிவகுப்பில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போற்றும் விதத்தில் வாகனங்கள், அலங்கார வண்டிகள் உருவாக்கப் பட்டிருந்தன.

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, போர்வீரர்களின் நினைவுச் சின்னமான அமர் ஜவான் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் நசீர் அகமது வாணிக்கு அசோக் சக்ரா விருதினை, அவரது மனைவி மற்றும் தாயாரிடம் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

பெண்கள் தலைமை

இந்த ஆண்டு, குடியரசு தின அணிவகுப்பில், அசாம் ரைபிள் படை சார்பில், பெண்கள் மட்டுமே பங்கேற்று வரலாற்று சாதனை படைத்தனர். இதுபோன்ற பல்வேறு ராணுவப் பிரிவினர் நடத்திய அணிவகுப்புகள், அலங்கார ஊர்திகளுக்கு பெண் அதிகாரிகளே தலைமையேற்று வழிநடத்தினர்.

அணிவகுப்பில், இந்திய ராணுவத்தில் தொலைதொடர்பு களை கையாளும் படைப்பிரிவைச் சேர்ந்த கேப்டன் சிஷா சுரபி, ஆண் வீரர்களுடன் இணைந்து மோட்டார் சைக்கிள் சாகசம் புரிந்தார். இதன் மூலம், குடியரசு தினத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து சாகசம் செய்த முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. அவரது சாகசத்தை பார்த்த பார்வையாளர் கள், கரகோஷம் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர்.

லெப்டினன்ட் பாவனா கஸ்தூரி, இந்திய ராணுவ சேவை பிரிவுக்கும், கேப்டன் பாட்னா சயல் ஆகியோர், ராணுவ தொலைதொடர்பை கையாளும் பிரிவு நடத்திய அணிவகுப்புக்கும் தலைமையேற்று வழிநடத்தினர்.

தமிழகம் சார்பில் உருவாக்கப் பட்ட அலங்கார ஊர்தியும் அணி வகுப்பில் இடம்பெற்றிருந்தது. இதில் மகாத்மா காந்தியின் மதுரை வருகையை குறிக்கும் வகையில் அவரது சிற்பம் அமைக்கப் பட்டிருந்தது. மதுரையில் உள்ள ஏழைகளை பார்த்து, அவர்களைப் போன்றே எளிய உடைக்கு காந்தி மாறிய தகவலும் இந்த ஊர்தியில் இடம்பெற்றிருந்தது. ராகுலுக்கு முன்வரிசையில் இடம்

டெல்லியில் உள்ள ராஜபாதையில் கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் ராகுல் காந்திக்கு 6-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது. மரபுப்படி எதிர்க்கட்சித் (காங்கிரஸ்) தலைவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்காத மத்திய அரசின் செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் ராகுல் காந்திக்கு முதல் வரிசையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது, கட்கரியும் ராகுலும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். இதுபோல மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) குலாம் நபி ஆசாத்துக்கு 2-வது வரிசையில், ராகுலுக்கு பின்புறம் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டு மக்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in