திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க தொடரப்பட்ட வழக்கு: முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க தொடரப்பட்ட வழக்கு: முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

திருவாரூர் சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு வருகிற 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், கஜா புயலால் திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தற்பொழுது திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் வைப்பது என்பது அவசியம் இல்லை. கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தற்போது மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் சீரமைப்புப் பணிகளில் பாதிப்பு ஏற்படும், அதேபோல முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா மனுத்தாக்கல் செய்தார். இது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்தார்.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி வழக்கு தொடர்பான விவரங்கள் கொடுக்கப்பட்டதை எடுத்துரைத்து, வழக்கை விசாரிக்க க் கோரினார். அப்போது தலைமை நீதிபதி திருவாரூர் தேர்தல் தொடர்பான மனுவை விசாரிக்க ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருவாரூர் தொகுதியில் கருத்துக்கேட்பு நடத்தி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இடைத்தேர்தலை ஒத்தி வைப்பதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துவிட்டது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்திய கம்யூனிட்ஸ் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூரைச் சேர்ந்த ரத்தினகுமார், மாரிமுத்து ஆகியோரின் மனுவை முடித்து வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in