

தந்தையின் மருத்துவ செலவுக்காகவும் குடும்பச் செலவைச் சமாளிக்கவும் ஆணாக மாறி, தந்தையின் சலூனை நடத்திய மகள்களை அரசு அதிகாரிகள் கவுரவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த துருவ் நாராயணன் என்பவரின் இரு மகள்கள் ஜோதி குமாரி (18) மற்றும் நேகா (16). சலூன் நடத்தி வந்த துருவ்வுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. 2014-ல் அவர் படுத்த படுக்கையானார்.
சலூனைத் தவிர அவர்களுக்குச் சொத்து எதுவும் இல்லை. வருமானத்துக்கு வழியில்லாததால், மகள்கள் இருவரும் சலூனை ஏற்று நடத்த முடிவு செய்தனர். ஆனால் அதற்கும் பிரச்சினை வந்தது.
இளம் பெண்களிடம் முடியை மழிக்கவும், மீசையை எடுக்கவும் வாடிக்கையாளர்கள் தயங்கினர். சிலர் தவறாக நடக்க முயற்சித்தனர். இதனால் தங்களின் கெட்டப்பை மாற்ற சகோதரிகள் இருவரும் முடிவு செய்தனர். தலைமுடியை கிராப் வெட்டிக் கொண்டனர். கையில் ஆண்களைப் போல காப்பு போட்டுக்கொண்டனர். தீபக், ராஜு என்று ஆண் பெயரை வைத்துக் கொண்டனர்.
அவர்களின் கிராமத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இவர்களைப் பற்றித் தெரிந்தே இருந்தது. ஆனால் சில ஆண்டுகளில் பக்கத்து ஊர்களில் இருந்தும் வந்த வாடிக்கையாளர்களுக்கு எதுவும் தெரியவில்லை.
இருவரும் சேர்ந்து தினந்தோறும் குறைந்தது 400 ரூபாய் சம்பாதித்தனர். அது தந்தையின் மருத்துவத்துக்கும் குடும்பச் செலவுக்கும் போதுமானதாக இருந்தது. காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு, மதியத்துக்கு மேல் இருவரும் கடையைத் திறப்பர். ஜோதி இப்போது பட்டதாரி ஆகிவிட்டார். நேகா இன்னும் படித்துக்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசும் நேகா, ''ஆரம்பத்தில் கிராமத்தில் சிலரே எங்களைக் கிண்டலடிப்பர். ஆனால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தினோம். ஏனென்றால் அப்போது எங்களுக்கு வேறு வழியில்லை.
ஆனால் இப்போது எங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. யாரைக் கண்டும் பயப்படுவதில்லை. நாட்கள் செல்லச் செல்ல எங்களுடைய நிஜ அடையாளத்தை வாடிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தினோம். பெரும்பாலானோர் எங்களைப் புரிந்துகொண்டனர்.
அக்கா (ஜோதி) மீண்டும் தன்னுடைய முடியை வளர்க்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் என்னைப் பார்த்தால் இப்போது கூட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது'' என்று குதூகலிக்கிறார் நேகா.
இவர்களைப் பற்றி கோரக்பூரில் உள்ள இந்தி செய்தித்தாளில் செய்தி வர, சகோதரிகளை அரசு அதிகாரிகள் அழைத்து கவுரவித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய அதிகாரிகளில் ஒருவரான அபிஷேக் பாண்டே, ''அனைத்துப் பிரச்சினைகளையும் போராடிக் கடந்து வாழ முடியும் என்பதற்கு இவர்களின் கதை ஓர் ஆச்சர்ய உதாரணம். சமூகத்துக்கு இந்த சகோதரிகள் உத்வேகம் அளிப்பவர்களாக இருக்கின்றனர்'' என்றார்.