

போலி நிறுவனங்களைக் கணக்கில்காட்டி ரூ.177 கோடி சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மோசடி செய்த குஜராத்தைச் சேர்ந்த இளைஞரை ஜிஎஸ்டி வரி ஆய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
இத குறித்து ஜிஎஸ்டி வரி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், " குஜராத் மாநிலம், வதோதரா நகரைச் சேர்ந்தவர் இஹாஸ் அலி சயத். இவர் போலியாக இன்வாய்ஸ்களையும், 66 போலி நிறுவனங்களையும் கணக்கில் காட்டி ஜிஎஸ்டி இன்வாய்ஸ்களை தயாரித்துள்ளார்.
தான் வரி செலுத்தியதாகவும் அந்த வரிக்கான இன்புட் டேக்ஸ் கிரெடிட்டையும் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, ஜிஎஸ்டி வரி ஆய்வு அதிகாரிகள் சயத் அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது ஜிஎஸ்டி பதிவு, அடையாள அட்டை, சிம் கார்டு, லாகின் பாஸ்வேர்டு, ஆன்-லைன் பாஸ்வேர்ட் ஆகியவை போலியான பெயரில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்ததைக் கண்டுபடித்தனர்.
சயத் கடந்த ஓர் ஆண்டாக போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.177.64 கோடி இன்புட் டேக்ஸ் கிரெடிட் பெற்றுள்ளதையும் ரூ.1,210 கோடி வரி செலுத்தியதாக இன்வாய்களை உருவாக்கியதையும், ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மூலம் சயத் ரூ.177 கோடி வரி மோசடி செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்து இஹாஸ் அலி சயத்தை அதிகாரிகள் கைது செய்தனர் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.