

புலந்த்ஷெஹரில் மாட்டிறைச்சி தொடர்பாக எழுந்த கலவரத்தில் காவல்துறை உயரதிகாரி சுபோத் குமார் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பஜ்ரங் தளம் அமைப்பாளர் யோகேஷ் ராஜ் பல நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.யில் உள்ள புலந்த்ஷெஹரின் மஹாவ் கிராமத்தில் கடந்த 3- ம் தேதி பசு வதையின் பெயரில் கலவரம் நிகழ்ந்தது. இதில், புலந்த்ஷெஹரின் சாய்னா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் சிங் மற்றும் மாணவர் சுமித் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
கலவரத்தை நடத்தியதாகவும், இருவரது கொலை வழக்கிலும் முக்கியக் குற்றவாளிகளாக புலந்த்ஷெஹர் மாவட்ட பஜ்ரங் தளம் அமைப்பாளரான யோகேஷ் ராஜ், அவரது அமைப்பு சகாக்களான ஷிகார் அகர்வால் மற்றும் உபேந்திர ராகவ் ஆகியோர் மீது வழக்கு பதிவானது. மேலும், வழக்கில் குறிப்பிட்ட 76 பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தலைமறைவாக உள்ளனர்.
சுபோத் குமார் சிங்கிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைச் சுட்ட பிரசாந்த் நாத், சுடப்படுவதற்கு முன்பாக கோடரியால் தாக்கிய கலுவா ஆகியோரை கடந்த வாரம் போலீஸார் கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் புலந்த்ஷெஹர் மாவட்ட பஜ்ரங் தளம் அமைப்பாளரான யோகேஷ் ராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பல நாட்களாக தலைமறைவாக இருந்த யோகேஷ் ராஜ், அவ்வப்போது சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
அதில் காவல்துறை அதிகாரி கொலை தொடர்பாகவும், பசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக பல தகவல்களை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, புலந்த்ஷெஹர் அருகே உள்ள புர்ஜியாவில் உள்ள கல்லூரியில் பதுங்கி இருந்த யோகேஷ் ராஜை கைது செய்துள்ளதாக உ.பி போலீஸார் தெரிவித்துள்ளனர்.