Last Updated : 01 Jan, 2019 02:24 PM

 

Published : 01 Jan 2019 02:24 PM
Last Updated : 01 Jan 2019 02:24 PM

உதயமாயின உயர் நீதிமன்றங்கள்: தெலங்கானா, ஆந்திராவுக்கு தனித்தனி தலைமை நீதிபதிகள் பொறுப்பேற்பு

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு தனித்தனி உயர் நீதிமன்றங்கள் உதயமாகி இன்று முதல் செயல்படத் தொடங்கின. இந்த நீதிபதிகளின் தலைமை நீதிபதிகள் தனித்தனி இடங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாகி உயர் நீதிமன்றங்கள் இல்லாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் தனித்தனி நீதிமன்றங்கள் கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு தனித்தனி உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த வாரம் வெளியிட்டார்.

இதன்படி ஆந்திர மாநிலத்துக்கென தனி உயர் நீதிமன்றம் தலைநகர் அமராவதியிலும், தெலங்கானா மாநிலத்துக்கென தனி உயர் நீதிமன்றம் ஹைதராபாத்திலும் அமைக்கப்பட்டது.

ஆந்திரா மாநிலத்துக்குத் தனியாக உயர் நீதிமன்ற கட்டிடம் அமராவதியில் கட்டப்பட்டு முடிக்கும் நிலையில் இருக்கிறது. அந்தப் பணிகள் முடியும் வரை உயர் நீதிமன்றம் விஜயவாடாவில் தற்காலிகமாகச் செயல்படும்.

விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாகரி பிரவின் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இஎஸ்எஸ். நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, வழக்கறிஞர்கள், சட்டத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விஜயவாடாவில் உள்ள தற்காலிக உயர் நீதிமன்ற கட்டிடத்தை நீதிபதி ரமணா திறந்துவைத்தார்.

முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தலைமை நீதிபதிஉடன் 12 நீதிபதிகளும் பதவியேற்றுக் கொண்டனர்.

59 வயதான ராதாகிருஷ்ணன், கர்நாடக மாநிலத்தில் சட்டம் பயின்று, கடந்த 2004-ம் ஆண்டு அங்கள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் 2017-ம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

இரு மாநிலங்களுக்கும் பொதுவான உயர் நீதிமன்றத்தில் 3.4 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 70 சதவீத வழக்குகள் ஆந்திர மாநிலம் தொடர்பானவை என்பதால், தனி நீதிமன்றம் அமைக்கும் பணி தீவிரமானது.

இதன்படி 1600 ஊழியர்கள், 58:42 என்ற வீதத்தில் பிரிக்கப்பட்டு இரு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டனர். ஆந்திர மாநிலத்துக்கு 539 நீதிமன்ற அதிகாரிகளும், தெலங்கானா மாநிலத்துக்கு 362 அதிகாரிகளும் அனுப்பப்பட்டனர்.

ஆந்திர மாநிலத்துக்குத் தனியாக உயர் நீதிமன்றம் 62 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கிடைத்துள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு குர்ணூல் தலைநகராக இருந்தபோது, குண்டூரில் உயர் நீதிமன்றம் செயல்பட்டது. அதன்பின் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டபின் ஆந்திர மாநிலம், ஹைதராபாத் மாநிலத்தோடு இணைந்து ஆந்திரப் பிரதேசம் என்று உதயமாகி, கடந்த 1956-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உயர் நீதிமன்றம் மாற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x