

ஆந்திர மாநிலம், அனந்தபூரில் நேற்று சுற்றுப்பயணம் மேற் கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, கதிரியில் செர்லோபள்ளி அணைக்கட்டிலிருந்து கிருஷ்ணா நதி நீரை திறந்து வைத்து பேசியதாவது:
போலாவரம் அணைக்கட்டு பணிகள் தற்போது 64 சதவீதம் முடிவடைந்துள்ளன. மேலும், ஆந்திர மாநிலத்தில் உள்ள வம்சதாரா, நாகவள்ளி, கோதாவரி, கிருஷ்ணா, பென்னா ஆகிய நதிகளை இணைப்பதே லட்சியம். இந்த நதிகளை இணைப்பது மூலம் மாநிலத்தில் முழுமையாக நீர் பிரச்சினையை தீர்ப்பேன். நாட்டில் மழை குறைவாக பெய்யும் 2வது மாவட்டமாக அனந்தபூர் உள்ளது. இதனால் இம்மாவட்டத் தில் ஒரு லட்சம் தண்ணீர் குட்டை கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த அரசு இம்மாவட் டத்துக்கு பல்வேறு நலதிட்டங்களை அமல்படுத்தி வருகிறது. 2 கைகளை இழந்தவர்களுக்கு அரசு மாத உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க தீர்மானித் துள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட விழா மேடையில், திடீரென 87 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வந்தார். அவர், சந்திரபாபு நாயுடுவிடம் ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை கொடுத்தார். அதனை வாங்கிய சந்திரபாபு நாயுடு, ‘இந்த பணம் எதற்கு? என கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி, தனது பெயர் முத்தியாலம்மா என்றும், தான் அனந்தபூர் மாவட்டம், ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், மாநிலத் தலைநகர் அமராவதியை உருவாக்க தனது பென்ஷன் பணத்தில் சிறுக, சிறுக சேர்த்து வைத்த ரூ. 50,000 பணத்தை முதல்வர் நிதிக்காக அளிக்க முன் வந்துள்ளேன் என கூறினார். இதனை கேட்ட சந்திரபாபு நாயுடு ஆச்சர்யமடைந்து, அந்த மூதாட்டி யின் காலில் விழுந்து தன்னை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண் டார். பின்னர், தள்ளாத வயதிலும் தனது மருத்துவ செலவுக்கு கூட வைத்துக்கொள்ளாமல், மாநில தலைநகர் அமைக்க நிதி உதவி செய்த மூதாட்டி முத்தியாலம் மாவை வெகுவாக பாராட்டினார். இவரை பார்த்து மக்கள் அமராவதிக்கு சுயமாக நிதி உதவி செய்ய முன்வர வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.