

அதிகாரத்துக்காக தன் சுயமரியாதையை விற்பவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, அவருக்கு சுயமரியாதை கிடையாது, பெண் சமூகத்துக்கு அவர் மிகப்பெரிய கறை என்று பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கடந்த 1995-ம் ஆண்டு லக்னோவில் உள்ள விருந்தினர் மாளிகையில், சமாஜ்வாதிக் கட்சியினர் மாயாவதியை தாக்கி அவமரியாதை செய்தனர். ஆனால், இரு கட்சிகளும் தங்களின் பகையை மறந்து வரும் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்தனர். இதுதொடர்பாக சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கடந்தவாரம் கூட்டணிக்கான முறைப்படி அறிவிப்பை வெளியிட்டனர்.
அப்போது பேசிய மாயாவதி, நாட்டின் நலனுக்காகக் கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து இந்த கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.
இந்நிலையில், லக்னோவில் நடந்த கூட்டத்தில் முகல்சாரே தொகுதியின் பெண் எம்எல்ஏ சாதனா சிங் நேற்று பேசினார். அப்போது மாயாவதியை கடுமையான சொற்களாலும், அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் விமர்சித்தார். அவர் பேசியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவாதிக்கு சுயமரியாதை என்பதே கிடையாது. ஏற்கனவே அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர். மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார், இப்போது தனது சுயமரியாதையையும் அதிகாரத்துக்காக விற்கத் துணிந்துவிட்டார். மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை. இவ்வாறு சாதானா சிங் பேசினார்.
பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஸ் சந்திர மிஸ்ரா கூறுகையில், “ சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதைப் பொறுக்க முடியாமல் பாஜகவினர் பேசுகிறார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் நிலைகுலைந்து பேசுகிறார்கள் “ எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி ட்விட்டரில் கூறுகையில், “ பிரச்சினைகள் அடிப்படையில் அனைவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பாஜக எம்எல்ஏபேசியது ஏற்கமுடியாது. அதிலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பேசியுள்ளார். ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார், இதைக் கேட்ட மக்களும் ஆதரித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மாயாவதியை தரக்குறையாக பாஜகவினர் பேசுவது முதல்முறை அல்ல. கடந்த 2016-ம் ஆண்டு உ.பி. பாஜக தலைவர் தயாசங்கர் சிங், மாயாவதி குறித்து மிகவும் தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இப்போது அவர் யோகி ஆதித்யநாத் அரசில் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.