

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எதிர்கட்சித் தலைவராக உள்ள குலாப் சந்த் கடாரியா, ''முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
ராஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு குலாப் சந்த் கடாரியா பேசியதாவது:
''தேசத்தின் மோசமான நிலைக்கு முஸ்லிம் மக்கள் தொகையே பொறுப்பாகும். இதற்கான சட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது மிக மிக அவசியம்.
நாங்கள் (இந்துக்கள்) இரண்டு குழந்தைகளுக்கு எங்களைக் கட்டுப்படுத்தினால், அவர்களும் (முஸ்லிம்கள்) இரண்டோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்கள் தொகை என்ற ஒரு காரணத்தால் வளர்ச்சிக்காக நாம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகின்றன.
திருத்தங்களைக் கொண்டுவந்தோ அல்லது அதை மாற்றுவதன் மூலமோ சட்டங்களைச் சரியாக ஒழுங்கமைக்கப்படவில்லை என்றால் அடுத்து வரும் 50 ஆண்டுகளில் மக்கள்தொகை மேலும் மிதமிஞ்சி மிக மோசமான நிலையை அடையும். சட்டத்தை இயற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
ஆனால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே சட்டத்தை மாற்ற முடியும் என்கிற விதியையும் மாற்றவேண்டிய அவசரத் தேவை உள்ளது''.
இவ்வாறு கடாரியா பேசினார்.
சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்த பிறகு, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக கடாரியா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வசுந்தரா ராஜேவின் ஆட்சிக் காலத்தில் மாநில உள்துறை மந்திரி என்ற முறையில், கடாரியா, ''நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினரே அல்ல. அவர்கள் இந்த நாட்டில் மாபெரும் மக்கள்கூட்டமாக உள்ளனர் என்று சர்ச்சையாகப் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.