

நேரடி மானியம், கடன்தொகை உயர்வு, பயிர் காப்பீட்டில் சலுகை என இடைக்காலப் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றன. வரவிருக்கும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு இவற்றை வெளியிடுகிறது.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தமைக்கு விவசாயிகள் பிரச்சினை முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது. இதன் தாக்கம் வரும் மக்களவை தேர்தலிலும் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு தன் இடைக்காலப் பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக பல முக்கிய சலுகைகளை அறிவிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய விவசாயத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘தற்போது வெளி யாக உள்ள அறிவிப்புகள் சிறு,குறு விவசாயிகள் மற்றும் ஏழைக்குடும் பங்களுக்கு பலன் தரும் வகையில் இருக்கும். இதற்காக, புதிய திட்ட அறிவிப்புகளுடன், ஏற்கனவே உள்ளவற்றில் சில மாற்றங்களும் செய்யப்பட உள்ளன. இதன்மூலம் அரசுக்கு வருடந்தோறும் ரூ.70,000 கோடி கூடுதல் செலவாகும்’ எனத் தெரிவித்தன.
இதன்படி, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் மானியத்தொகை எண்ணிக்கை உயர்கிறது. உதாரண மாக, தற்போது உழவுக்காக மட்டுமே நேரடி மானியமாக கிடைக்கிறது. இதில் உரம், மின்சாரம் உள்ளிட்டவைகளில் அரசு அளிக்கும் மானியங்கள் இனி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செல்லும். பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளை விட அதை அளிக்கும் நிறுவனங்களுக்கே அதிக பலன் எனப் புகார் உள்ளது.
இதை சமாளிக்கும் வகையில், பிரீமியம் தொகையை குறைத்து பலன்தொகை அதிகரிக்கப்பட உள்ளது. இத்துடன், காப்பீட்டிற் கான தொகை தாமதமாகாமல் இனி உடனடியாகக் கிடைக்கும்.
தற்போது ரூ.3 லட்சம் வரை அளிக்கப்பட்டு வரும் பயிர்க் கடனில் மத்திய அரசின் மானியமாக இரண்டு சதவீத வட்டி தள்ளுபடி உள்ளது. இதை ஊக்கப்படுத்தும் வகையில் பயிர்க் கடனை குறித்த நேரத்தில் கட்டி முடிப்போருக்கு மேலும் மூன்று சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு, நான்கு சதவீத வட்டி செலுத்தினால் போதுமானது.
விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன்தொகையின் மதிப்பும் இந்த வருடம் ரூ.12 லட்சம் கோடி வரை உயருவதாகவும் அறிவிப்பு வெளியாக உள்ளது.