

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் நான்கு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாநிலங்களவையில் இன்றும் அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் மேகேதாட்டு அணை விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
காவிரியின் நதியின் குறுக்கே, மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வரைவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தமிழ அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே தமிழக எம்.பி.க்கள் காவிரி விவகாரத்தை இரு அவைகளிலும் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல நாட்களாக இரு அவைகளும் முடங்கி வருகின்றன.
இந்தநிலையில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் நேற்று பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து அதிமுக எம்.பி.,க்கள் 24 பேரை 5 அமர்வுகளுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்திர மகாஜன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்றும் மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் மேகேதாட்டு அணை விவகாரத்தை எழுப்பினர். இதுபோலவே தெலுங்கு தேச எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நடந்த முடியாத சூழலில் அடுத்தடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியபோதும் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதையடுத்து அதிமுக மற்றும் தெலுங்குதேச கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்களை 4 நான்கு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்திர மகாஜன் உத்தரவு பிறப்பித்தார்.
இதுபோலவே மாநிலங்களவையிலும் மேகேதாட்டு அணை விவகாரத்தை அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் எழுப்பினர். அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் மற்றும் திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் மேகோதாட்டு அணை விவகாரத்தை எழுப்பினர்.