பிரியங்காவின் அரசியல் இன்னிங்ஸ்: பிப்ரவரி 4-ல் கும்பமேளாவிலிருந்து ஆரம்பம்

பிரியங்காவின் அரசியல் இன்னிங்ஸ்: பிப்ரவரி 4-ல் கும்பமேளாவிலிருந்து ஆரம்பம்
Updated on
1 min read

காங்கிரஸ் தலைவர் மற்றும் சகோதரர் ராகுல் காந்தியுடன் கும்பமேளாவிற்குச் செல்லும் பிரியங்கா காந்தி அங்கே கங்கையில் ஒரு புனித நீராடலுக்குப் பிறகு தனது அரசியல் பணியைத் தொடங்குவார் என்று அதிகாரபூர்வச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ராகுல் இளைய சகோதரியான பிரியங்கா வதேரா (47), முதன்முறையாக காங்கிரஸின் பொதுச்செயலாளராக அமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கு உ.பி.யின் கிழக்கு பகுதி பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு வெளியான பிறகு பிரியங்காவின் அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் கட்சிகளிடையே அதிர்வலை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரியங்கா காந்தி வரும் ஏப்ரல் 4 அன்று பிரயக்ராஜ் செல்கிறார். அங்கு கங்கையில் புனித நீராடிவிட்டு அதன் பின்னரே அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கும் விவரம் வருமாறு:

பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் பிப்ரவரி 4 அன்று கும்பமேளாவிற்குச் செல்கின்றனர். அங்கு கங்கைக் கரையில் நடைபெறும் மவுனி அமாவாஸ்யா மற்றும் ஷாஹி ஸ்னானம் ஆகிய இரு புனித சடங்குகளில் இருவரும் பங்கேற்க உள்ளனர்.

ஆனால், பிப்ரவரி 4-ம் தேதி புனித நீராடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பிப்ரவரி 10 ஆம் தேதி பஸந்த் பஞ்சமி மற்றும் 3-வது ஷாஹி ஸ்னானம் ஆகிய சடங்குகளின்போது கலந்துகொள்வார்கள்.

அலகாபாத் (பிரயக்ராஜ்) திரிவேணி சங்கமத்திற்குச் சென்று அங்கு புனித நீராடுவதற்காக, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் செல்வது இதுவே முதல் முறையாகும். 2001-ல் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி கும்பமேளா சென்று புனித நீராடினார்.

பிப்ரவரி மாதம், கும்பமேளா நிகழ்வுகளில் பங்கேற்ற பிறகே பிரியங்கா, லக்னோவில் ராகுலுடன் இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in