

பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கும் ஒப்பந்தம் தொடர்பா தி இந்து(ஆங்கிலம்) இன்று வெளியிட்ட கட்டுரையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மத்திய அரசை சாடியுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 126 ரஃபேல் போர்விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த பாஜக அரசு பிரதமர் மோடி 2015-ம் ஆண்டு பாரிஸ் சென்றபோது, 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தார். இந்த 36 போர் விமானங்களிலும் 13 பிரத்யேக மேம்பாட்டு அம்சங்களுக்காக மட்டும் 130 கோடி யூரோக்கள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியி்ல 126 விமானங்களுக்கும் பிரத்யேக வசதிகளுடன் சேர்த்தே 140 கோடி யூரோதான். இந்த ஒப்பந்தத்தால்தான் விமானம் ஒன்றின் விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளது என கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கட்டுரையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசைக் குற்றம்சாட்டியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “ தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டுள்ள மத்திய அரசு, காங்கிரஸ் கட்சி 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க செய்திருந்த ஒப்பந்தத்தை 36-ஆகக் குறைத்துள்ளது.
தி இந்து இன்று பல்வேறு புதிய உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. கேள்விகள் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. விமானப்படைக்கு 126 ரஃபேல் போர் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏன் மத்திய அரசு 36 விமானங்களாகக் குறைத்தது
மத்திய அரசு தேசப்பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு, விமானப்படைக்கு உண்மையில் 126 போர்விமானங்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வழங்க மறுத்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் தி இந்து நாளேட்டின் செய்தி புகைப்படத்தை வெளியிட்டு கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :
“ பிரான்ஸுடன் 36 ரஃபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்த மிகப்பெரிய அவசரத்துடன், தனது தொழிலதிபர் நண்பருக்காக நாட்டின் பாதுகாப்பை விலை கொடுத்து, அரசுக்கு பெரும் செலவை ஏற்படுத்தி மோடி செய்துள்ளார் என்பது சந்தேகமில்லாமல் தெளிவாகிறது.
ஒட்டுமொத்த ரஃபேல் ஊழலையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம்தான் விசாரிக்க முடியும் என்று நீண்ட நாட்களாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். அப்போதுதான் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய முடியும், தேவைப்படும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து விசாரிக்க முடியும். உண்மைகள் வெளிவந்துவிடும் என்று கருதி, அதற்கு மோடி அரசு தடை செய்ய விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.