10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு ரூ.8 லட்சமென்றால், வருமானவரிக்குப் பொருந்தாதா?- மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு ரூ.8 லட்சமென்றால், வருமானவரிக்குப் பொருந்தாதா?- மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி என்று வந்துவிட்டால் நாங்கள்தான் பெரியண்ணன், கூட்டணி இடங்கள் குறித்து நாங்களே முடிவு செய்வோம் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தில் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். அதில் கூட்டணி குறித்தும், எதிர்வரும் மக்களவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்துக்கு முன்பின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணியைப் பொருத்தவரை நாங்கள் தான் பெரியண்ணன். அந்த நிலைப்பாடு தொடரும். கூட்டணி குறித்து இதுவரை பாஜகவிடம் இருந்து எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. யாருக்கு எங்களுடன் கூட்டணி குறித்து பேசவிருப்பமோ அவர்கள் முதலில் வரட்டும். நாங்கள் கூட்டணி குறித்து அழைப்புக்காக நாங்கள் காத்திருக்கவில்லை.

வருமானவரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சமாக பட்ஜெட்டில் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். எங்கள் கட்சியின் தலைவர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பை நடுத்தர மக்களின் நலனுக்காக ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஏற்கெனவே மத்திய அரசு உயர்சாதியினர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமானமாக ரூ8 லட்சமாக நிர்ணயித்துள்ளது. ஆதலால், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் இதே சலுகையை வழங்கி, ரூ. 8 லட்சமாக வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும்.

இந்த ஆலோசனையில் விவசாயிகள் பிரச்சினை, வறட்சி, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விலையின்மை ஆகியவை குறித்தும் ஆலோசித்தோம். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ரஃபேல் விவகாரம் குறித்து பேசுவோம் " எனத் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனா கட்சியும் இணைந்து போட்டியிட்டன. இதில் 48 இடங்களில் பாஜக 24 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களிலும், சிவசேனா 20 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும் வென்றது.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில் பிரதமர் மோடியின் அலை காரணமாக பாஜக 122 இடங்களைக் கைப்பற்றியது. சிவசேனா 63 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து முதல்வராகத் தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்றார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in