மத்தியில் ஆட்சி மாற்றம்; இதுவே எங்கள் போர்க்குரல்: மம்தா பானர்ஜி ஆவேசம்

மத்தியில் ஆட்சி மாற்றம்; இதுவே எங்கள் போர்க்குரல்: மம்தா பானர்ஜி ஆவேசம்
Updated on
1 min read

பிரதமர் மோடி ஆட்சியின் காலாவதி தேதி முடிந்து விட்டது, இனிமேல் மத்தியில் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரபிரதேசத்தில் சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங் கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று பேசினர். இறுதியாக மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மக்கள் இந்த அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி வருகிறார்கள்.

மோடி அரசின் காலாவதி தேதி முடிந்து விட்டது. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது. மத்தியில் ஆட்சியை மாற்றுவோம். இனிமேல் மத்தியில் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும்.

கூட்டு பொறுப்பு பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோரை அவர் புறக்கணிக்கிறார். சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுகிறார். ஆனால் எங்கள் அணியில் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக முடிவெடுக்கிறோம்.

பாஜகவை அகற்றுவதே எங்கள் அனைவரின் ஒரே நோக்கம். தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம். நாட்டில் தற்போது சூப்பர் எமர்ஜென்சி நடக்கிறது. மத்தியில் ஆட்சியில் மாற்றம், இதுவே எங்கள் போர்க்குரல்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in