ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய்: ராகுலுக்குப் போட்டியாக பிரதமர் மோடி திட்டம்?

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய்: ராகுலுக்குப் போட்டியாக பிரதமர் மோடி திட்டம்?
Updated on
2 min read

நாட்டில் ஏழை மக்களின் வறுமையைப் போக்கும் வகையில் குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்புத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய நிலையில், அவருக்குப் போட்டியாக வரும் பட்ஜெட்டில் பிரதமர் மோடியும் குறைந்த பட்ச வருவாய் உறுதியளிப்புத் திட்டத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று பேசிய ராகுல் காந்தி, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைகளின் வறுமையைப் போக்கும் வகையில், குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்புத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக பாஜகவும் இந்தத் திட்டத்தை வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை அறிந்து சோதனை முயற்சியாக சில கிராமங்களில் நடைமுறைப்படுத்தினால் இந்தத் திட்டத்தின் உண்மையான பயனாளிகள் யார், யார் பயன்பெறப்போகிறார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

மேலும், இந்தத் திட்டத்தை எந்த அரசு செயல்படுத்தினாலும் நிதிப் பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-17 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் நாடு முழுவதும் உள்ள அடித்தட்டு மக்களில் 75 சதவீதம் பேருக்கு குறைந்தபட்ச ஊதியம் குறித்து தெரிவித்தது. அப்போது குடும்பத்துக்கு ரூ.630 என்ற அளவீட்டை அப்போதைய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தத் திட்டம் இனிவரும் காலங்களில் செயல்படுத்தும் போது கோடிக்கணக்கில் நிதி தேவைப்படும். அப்போது, நிதிச் சமநிலையை அரசு எவ்வாறு கையாளும் என்பது பெரும் கேள்விக்குறியாகும். உணவுக்கு மானியமாக தற்போது ரூ.1.70 லட்சம் கோடியோடு, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.55 ஆயிரம் கோடியையும் சேர்க்கும் போது, நிதிப் பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் செல்லும்.

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதிய திட்டம் (யுபிஐ) நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 6,540 கோடி முதல் ரூ.7,620 கோடி வரை கூடுதலாகச் செலவாகும்.

இதற்கு முன் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியப் பிரதேசத்தில் 8 கிராமங்களில் இந்த யுபிஐ திட்டத்தை சோதனை முயற்சியாகச் செயல்படுத்தியது. ஆனால், அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஒருவேளை இந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் எத்தனை கிராமங்களில் நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகும்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களுக்கு மட்டும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமா அல்லது, ஒவ்வொரு குடும்பத்துக்கும், தனிநபர்களுக்கும் செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உணவு மானியம் கிடைக்குமா அல்லது உணவு மானியத்தோடு இந்தத் திட்டம் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படுமா என்பதும் தெளிவாக இல்லை.

ஏற்கெனவே இந்தியாவில் மிகப்பெரிய நலத்திட்டங்கள் மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கேஸ் மானியம், விவசாயிகளுக்கு உர மானியம் போன்றவை குறைந்த அளவில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதைப் பராமரிப்பதிலும் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால், யுபிஐ போன்று மிகப்பெரிய அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது அதில் பெரிய அளவுக்குக் கண்காணிப்பு, திட்டமிடல் அவசியம்.

ஒருவேளை இந்த யுபிஐ திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்த அரசியல் கட்சிகள் விரும்பினால், தீவிரமான கள ஆய்வு, அது குறித்த ஆழ்ந்த கலந்தாய்வு, விவாதம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், ஆகியவற்றை வைத்துக்கொண்டு செயல்படுத்துவது அவசியம் இல்லாவிட்டால் எதிர்பார்த்த நல்ல விளைவுகள் கிடைப்பது சந்தேகம்.

பின்லாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்து வரும் நிலையில்கூட இன்னும் மக்கள்தொகையில் மூன்றில் ஒருபகுதி மக்கள் வறுமையின் பிடியிலும் அவசர நிலைக்கு மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமலும், விவசாயத்தில் இழப்போடும் இருக்கிறார்கள். ஆதலால் அவர்களைக் கைதூக்கிவிடும் வகையில் இந்தத் திட்டம் காலத்தின் கட்டாயமாகவும் இருக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in