Published : 14 Jan 2019 10:52 AM
Last Updated : 14 Jan 2019 10:52 AM

ரூ. 2 ஆயிரம் ஆசை: மோடியின் பெயரைக் கூறி ஒரு கிராம மக்களை ஏமாற்றிய மோசடியாளர்

மத்திய அரசிடம் இல்லாத திட்டத்தைக் கூறியும், பிரதமர் மோடியின் பெயரைக் கூறியும் ஒரு கிராமத்தையே ஏமாற்றி பல லட்சம் ரூபாயை மோசடியாளர் ஒருவர் சுருட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் இந்த ஆன்-லைன் மோசடிச் சம்பவம் நடந்துள்ளது.

ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹோலே நரசிப்பூர் தாலுகாவில் கவி சோமனஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள்தான் ஒட்டுமொத்தமாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன், மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி கிராமங்களில் உள்ள விவசாயி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறோம். உங்களுக்கு வழங்குகிறோம் வங்கிக்கணக்கு எண்ணைக் கொடுங்கள், ஆன்-லைன் மூலம் நேரடியாக பணம் பரிமாற்றம் செய்யப்படும் என்று கேட்டுள்ளார்.

உண்மையில் இப்படிப்பட்ட ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை பிரதமர் மோடியும் இப்படிஒரு திட்டத்தை அறிவிக்கவில்லை.

அந்த கிராமத்தைச் சேர்ந்தவர், ஏற்கெனவே ஆன்-லைன் மோசடி குறித்து அறிந்துள்ளதால், அவ்வாறு வங்கிக்கணக்கு எண்ணைத் தரமுடியாது என்று தெரிவித்துள்ளார். பின்னர், தன்னுடைய வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பதால், கொடுத்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்து அவர் தன்னுடைய வங்கிக் கணக்கு எண்ணை அளித்துள்ளார். வங்கிக்கணக்கு எண்ணை அளித்த சில நிமிடங்களில் அந்த நபரின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதைச் சற்றும் எதிர்பாராதவர் மகிழ்ச்சியில் திளைத்தார். தன்னுடைய வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் பணம் டெபாசிட் செய்யப்பட்ட செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார்.

உடனடியாக கிராம மக்கள், தனது உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் சென்று மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் மாதம் ஆன்-லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்று கூறி, தனக்கு ரூ.2 ஆயிரம் பரிமாற்றம் செய்யப்பட்டதையும் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோர் அந்த குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தாங்ககளாகவே அழைப்புச் செய்து பேசியுளளனர். அந்த நபரிடம் தங்களின் விவரங்களையும், வங்கிக்கணக்கு எண், டெபிட் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் அந்த மோசடியாளர் வங்கிக்கணக்கு எண்ணை அளித்த ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு டெபிட் கார்டு விவரங்களையும், ஒடிபி பாஸ்வேர்டையும் பெற்று வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை சுருட்டி தனது வங்கிக்கணக்கிற்கு மாற்றிஏமாற்றியுள்ளார். வங்கிக்கணக்கு எண், டெபிட்கார்டு எண் அளித்து நீண்டநேரம் ஆகியும் பணம் பரிமாற்றம் செய்யப்படாதது குறித்து அந்தக் கிராம மக்கள் அறிந்து விசாரிக்கும்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர்.

அதன்பின் பாதிக்கப்பட்ட அனைவரும் அலறியடித்து வங்கிக்குச் சென்று தங்கள் டெபிட் கார்டையும், வங்கிக்கணக்கையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கக் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர். ஆனால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரும் போலீஸிடம் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x