

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் ஃபேஸ்புக் வாயிலாக காதல் கொண்ட நபரை நம்பிச் சென்றபோது அங்கு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஷாம்லி நகர போலீஸ் கூறும்போது, "23 வயது பெண்ணுக்கும் சோனு என்ற நபருக்கும் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாற இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.
சோனுவின் வார்த்தையை நம்பிச் சென்ற அந்தப் பெண்ணை ஒரு ஓட்டலுக்கு அவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரும் அவரது சகோதரர்களும் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
பலாத்கார காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்த சோனு அந்தப் பெண்ணை மிரட்ட ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி சோனு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். ஷாம்லி மாவட்டத்தில் அவர்கள் திருமணம் நடந்தது.
இது தொடர்பாக அந்த இளம்பெண் சோனு மற்றும் அவரது குடும்பத்தினர் 10 பேர் மீது போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.