

மாரடைப்பு ஏற்பட்டபோதிலும், பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி 50 பயணிகளின் உயிரை அரசுப் பேருந்து ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார்.
தெலங்கானாவின் பேரபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானி நகரில் இருந்து செகந்திராபாத் நகருக்கு நேற்று அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்தை தாரினி மகேந்தர் என்பவர் இயக்கினார். பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பேருந்து ராகப்பூரைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, ஓட்டுநர் தாரினி மகேந்தருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த ஓட்டுநர் மகேந்தர், பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருப்பதை உணர்ந்து, பேருந்தின் வேகத்தை படிப்படியாகக் குறைத்து சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, ஸ்டியரிங் மீது சாய்ந்துவிட்டார்.
இதைப் பார்த்த நடத்துநர் ராணி, பயணிகள் அனைவரும் வந்து பார்த்தபோது மாரடைப்பால் ஓட்டுநர் மகேந்தர் துடிப்பதை அறிந்தனர். அந்தப் பேருந்தில் சிங்காரேனி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சந்திரசேகர் என்பவரும் பயணித்தார்.
ஓட்டுர் மாரடைப்பால் அவதிப்படுவதைப் பார்த்த சந்திரசேகர் முதலுதவி சிகிச்சை அளித்தார். அதன்பின் அந்தப் பேருந்தில் வேறு ஒரு பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் திருப்பதி என்பவர் பயணம் செய்தார். ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட விவரங்களை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, மாற்று ஓட்டுநராகத் திருப்பதி செயல்பட, உயர் அதிகாரிகளிடம் செல்போன் மூலம் பேசி நடத்துனர் ராணி அனுமதி பெற்றார்.
அதன்பின், மாற்று ஓட்டுநர் திருப்பதி பேருந்தை பேடபள்ளி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. ஒருமணிநேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை என்பதால், தனியார் ஆம்புலன்ஸை ரூ.2 ஆயிரம் வாடகைக்கு அமர்த்திய நடத்துநர், கரீம்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டுநர் மகேந்தரை அனுமதித்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவர் காப்பாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் மகேந்திர் 'தி இந்து'விடம்(ஆங்கிலம்) கூறியதாவது:
''நான் நேற்று காலை 5 மணி அளவில் கோதாவரிகானியில் இருந்து செகந்திராபாத் நகருக்கு பேருந்தை ஓட்டிச் சென்றேன். காமன்பூரைக் கடக்கும் போது மார்பு லேசாக வலித்தது. வலியை தாங்கிக்கொண்டு 5 கி.மீ. வரை ஓட்டி வந்தேன். ஆனால், ராகப்பூரை நெருங்கியபோது, மார்பு வலி கடுமையாகி என்னால் சுவாசிக்க முடியவில்லை, மயக்கமாக வந்தது. ஆனால், பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் என்னை நம்பிப் பயணித்ததால், பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி சாலை ஓரமாக நிறுத்தினேன்.
நான் பயணிகளின் பாதுகாப்பைப் பார்த்தேன். பயணிகள் என் உயிரைக் காத்தனர். பேருந்தில் இருந்த மருத்துவர் எனக்கு முதலுதவி அளித்து என்னைக் காப்பாற்றினார். எனக்கு இதுவரை எந்தவிதமான ரத்தக்கொதிப்பும், இதய நோயும் வந்தது இல்லை. ஆனால் எவ்வாறு இப்படி நடந்தது எனத் தெரியவில்லை'' எனத் தெரிவித்தார்.
மகேந்திருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
பேருந்தில் பயணித்த மருத்துவர் சந்திரசேகர், ஓட்டுநர் மகேந்திர் மாரடைப்பால் பாதிக்கப்படுவதை உணர்ந்தவுடன் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
அதன்பின் பேடபள்ளி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை என்பது தெரிந்தவுடன் தானே களத்தில் இறங்கி இசிஜி எடுத்து, செயற்கை சுவாசமும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.