பாஜக ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால், எப்போது கட்டுவது?: சிவசேனா கேள்வி

பாஜக ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால், எப்போது கட்டுவது?: சிவசேனா கேள்வி
Updated on
1 min read

பெரும்பான்மை உள்ள பாஜக ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டாவிட்டால், பின்னர் எப்போது ராமர் கோயில் கட்டுவது என்று பாஜகவுக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் மோடி சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அயோத்தி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பே, ராமர் கோயில் கட்டுவது குறித்து சட்டம் இயற்றப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இது குறித்து சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

ராமர் பெயரைச் சொல்லித்தானே மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவரைப் பொருத்தவரை சட்டத்தைக் காட்டிலும் கடவுள் ராமர் பெரிதாகத் தெரியவில்லை. எங்களுடைய கேள்வி , பெரும்பான்மை உள்ள பாஜக ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால் பின்னர் எப்போது கோயில் கட்டுவது.

2019-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டாவிட்டால், அது இந்தத் தேசத்து மக்களுக்குச் செய்யும் துரோகம். நாட்டு மக்களிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் மன்னிப்பு கோருவார்களா?.

குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிகப்பெரியதாகச் சர்தார் வல்லபாய் படேல் சிலையை மோடி எழுப்பி இருக்கிறார். ஆனால், சர்தார் படேலுக்கு இருக்கும் துணிச்சலை மோடி ராமர் கோயில் விவகாரத்தில் வெளிப்படுத்தவில்லை. இது வரலாற்றின் பக்கத்தில் பதிவு செய்யப்படும்.

ராமர் கோயிலுக்காக கடந்த 1991-92ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டபோது, நூற்றுக்கணக்கிலான கரசேகவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அந்த பெருங்கொலையை யார் செய்தது, ஏன் செய்தார்கள். நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் மாண்டார்கள், மும்பை குண்டுவெடிப்பிலும் இந்து, முஸ்லிம் தரப்பிலும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் ஏதாவது ஒருமுடிவு எடுத்திருந்தால், மக்கள் இப்படி செத்திருப்பார்களா, ரத்தக் களறியாக இருக்குமா

கரசேவகர்கள் நூற்றுக்கணக்கில் மாண்டதற்கும், ரத்தக்களறி ஏற்பட்டதற்கும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பொறுப்பு ஏற்றுக்கொள்வார்களா?

பிரதமர் மோடி தனது நேர்காணலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார். மத்திய அரசு மக்களுக்கு முன்கூட்டியே முறைப்படி அறிவித்து, எச்சரித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்திருந்தால், யாருக்கும் இந்த நடவடிக்கையும் அதிர்ச்சியாக இருந்திருக்காது. ஆனால், யாரிடம், எந்த மக்களிடம் நீங்கள் எச்சரித்தீர்கள்?.

வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்று மாண்டார்களே அவர்களிடம் கூறினீர்களா?, வேலையிழந்து தவித்தார்களே அவர்களிடம் தெரிவித்தீர்களா?,

வரும் மக்களவைத் தேர்தல் மக்களுக்கும், பாஜகவுக்கு எதிராக இருக்கும் மகாகூட்டணிக்குமானது என்று மோடி சொல்கிறார். நாங்கள் கேட்கிறோம். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் ஈரான் நாட்டு மக்கள்தான் பாஜகவுக்கு வாக்களித்தார்களா?. 5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக வாக்களித்த மக்கள் நாட்டின் குடிமக்கள் இல்லையா?

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in