Last Updated : 24 Jan, 2019 05:57 PM

 

Published : 24 Jan 2019 05:57 PM
Last Updated : 24 Jan 2019 05:57 PM

தன்னை அறிமுகப்படுத்திய பிரியங்காவை ராகுல் லக்னோவின் செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்துகிறார்

கடந்த 2004-ல் அரசியலில் நுழைந்த ராகுல் காந்தியை இளைய சகோதரியான பிரியங்கா அமேதியில் செய்தியாளர்கள் முன் அறிமுகப்படுத்தி இருந்தார். இதைப்போல், தற்போது பிரியங்காவை ராகுல் லக்னோவின் செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளார்.

இதற்காக, விரைவில் இருவரும் இணைந்து உ.பி.யின் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். இது இருவரும் சுமார் 14 வருடங்களுக்குப் பின் இணைந்து பேசும் இரண்டாவது செய்தியாளர் கூட்டமாக அமைய உள்ளது.

தம் தாய் சோனியா மற்றும் சகோதரர் ராகுலுக்காக ரேபரேலி, அமேதி தொகுதிகளில் மட்டும் பிரியங்கா கட்சிப் பணியில் ஈடுபட்டு வந்தார். அவரை காங்கிரஸ் நேற்று முதல் தேசிய பொதுச்செயலாளர் பதவி அளித்து தீவிர அரசியலில் இறக்கியுள்ளது.

லக்னோவின் மால் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் செய்தியாளர் அரங்கு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதை பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா தொடங்கி வைத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க உள்ளார்.

அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் இருந்து பிரியங்காவை அறிமுகப்படுத்தத் கட்சி திட்டமிட்டுள்ளது. இதை பிறகு தொடர்ந்து பிரியங்கா உ.பி. செய்தியாளர்களிடம் லக்னோவில் அடிக்கடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் உ.பி. காங்கிரஸார் கூறும்போது, ''காங்கிரஸ் மீது பாஜக செய்யும் விமர்சனங்களுக்கு இனி உ.பி.யிலேயே பிரியங்கா பதிலடி கொடுப்பார். இதுபோல், மாநிலத்தில் ஒரு தலைவர் இல்லாமல் டெல்லியில் இருந்து பேசவேண்டிய நிலை இனி மாறும்'' எனத் தெரிவித்தனர்.

அன்றாடம் பிரியங்காவின் செய்திகள் தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் வெளியாகி உ.பி.யில் இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சியிலும் காங்கிரஸ் இறங்கி உள்ளது. தன் பாட்டியை போன்ற தோற்றத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு, பிரியங்காவுடன் இந்திரா காந்தி உள்ள படங்களின் பேனர்கள் உ.பி. காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘திரும்பி வந்தார் இந்திரா’ என எழுதி வைத்துள்ளனர்.

பிரியங்காவை துர்கை அம்மன் எனவும் குறிப்பிட்டு சுவரொட்டிகளும் நகரில் ஒட்டப்பட்டுள்ளன. உ.பி.யில் காணாமல் போய் இருந்த பல காங்கிரஸ் தலைவர்கள் இதுபோல், சுவரொட்டிகளும், விளம்பரங்களும் அளித்து தம்மை மீண்டும் அறிமுகம் செய்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸுக்கு வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டும் கிடைத்தது. 2009-ல் அக்கட்சிக்கு 21 தொகுதிகள் கிடைத்திருந்தன.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x