மக்களவைத் தேர்தலில் மாநிலங்களவையின் பாஜக உறுப்பினர்களுக்கு அதிக பொறுப்பு

மக்களவைத் தேர்தலில் மாநிலங்களவையின் பாஜக உறுப்பினர்களுக்கு அதிக பொறுப்பு

Published on

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்ற மாநிலங்களவையின் பாஜக உறுப்பினர்களுக்கு அதிக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்த பட்டியலில் ஐந்து மத்திய அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் 25 மாநிலங்களின் தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை எம்.பி.க்கள் தம் தொகுதிகளின் வெற்றியில் பாடுபட வேண்டி அவர்களுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படவில்லை.

இவர்களில் போட்டியிட மறுவாய்ப்பு கிடைக்காதவர்களும் தம் தொகுதியின் புதிய வேட்பாளர்களின் வெற்றிக்காக பணியாற்ற அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஜெகத் பிரகாஷ் நட்டா, முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நட்டாவிற்கு உதவியாக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் பொறுப்பு மனிதவளத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகருக்கும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரான தாவர்சந்த் கெல்லட்டிற்கு உத்தராகண்ட் மாநிலப் பொறுப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ரயில் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சரான பியூஷ் கோயலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பொறுப்பை ஏற்றுள்ளனர். டெல்லியின் பொறுப்பை பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

மாநிலங்களவையின் பாஜக எம்.பி.க்களில் பூபேந்தரா யாதவிற்கு பிஹாரும், அணில் ஜெயினுக்கு சத்தீஸ்கரின் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பொறுப்பு ஓ.பி.மாத்தூரிடம், வி.முரளிதரனிடம் ஆந்திரப் பிரதேசமும் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர்களின் ஒருவரான முரளிதர் ராவிடம் கர்நாடகா பொறுப்பளிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள மாநிலங்களின் பொறுப்பு பாஜக ஆளும் மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள், அதன் எம்எல்ஏக்கள் மற்றும் மாநிலக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் அளித்துள்ளார் அமித் ஷா.

தமிழகத்தின் தேசியத் தலைவர்கள்

இவற்றில் தேர்தலுக்காக எந்த ஒரு மாநிலத்தின் முக்கியப் பொறுப்பும் தமிழக பாஜக தலைவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் அவர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதும், தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்வதும் காரணமாகக் கருதப்படுகிறது.

இக்கட்சியின் தமிழகத்தின் தேசிய கட்சித்தலைவர்களாக எல்.ஆர்.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் சமூக இணையதளப் பிரிவின் இணை அமைப்பாளராக கணேசன் மட்டும் ஏற்கெனவே உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in