நாட்டிற்கு விஸ்வாசமாக இல்லாதவர்களை குண்டு போட்டு அழிப்பேன் -உபி பாஜக எம்எல்ஏவின் ஆவேசப் பேச்சால் சர்ச்சை

நாட்டிற்கு விஸ்வாசமாக இல்லாதவர்களை குண்டு போட்டு அழிப்பேன் -உபி பாஜக எம்எல்ஏவின் ஆவேசப் பேச்சால் சர்ச்சை
Updated on
1 min read

நம் நாட்டிற்கு விஸ்வாசமாக இல்லாதவர்களை குண்டு போட்டு அழிப்பேன் என உபியின் பாஜக எம்எல்ஏவ ஆவேசமாகப் பேசியுள்ளார். தனக்கு பாதுகாப்பில்லை என கூறுபவர்கள் இந்நாட்டின் துரோகிகள் எனவும் அவர் கூறியதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக பாலிவுட் நடிகரான நஸ்ரூத்தீன் ஷா சமீபத்தில் புகார் கூறி கருத்து தெரிவித்திருந்தார். இவருக்கு பதிலளிக்கும் வகையில் உபியின் முசாபர்நகர் தொகுதியின் பாஜக எம் எல் ஏவான விக்ரம் செய்னி கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி விட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் விக்ரம் செய்னி கூறும்போது, ‘என்னிடம் ஒரு அமைச்சகம் கொடுங்கள். இந்த நாட்டிற்கு விஸ்வாசமாக இல்லாதவர்கள் ஒருவர் கூட மிஞ்சாத வகையில் அவர்கள் மீது குண்டு போட்டு விடுவேன்.’ எனத் தெரிவித்தார்.

இதற்கு அவரே மனிதகுண்டாகி வெடிப்பீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்த விக்ரம், இந்திய ராணுவத்திடம் அதற்காக பல குண்டுகள் இருப்பதாகப் பதில் அளித்தார்.

இது குறித்து மேலும் விக்ரம் கூறும்போது, ’எனது தனிப்பட்ட கருத்தான இதனுடன் என் கட்சியான பாஜகவை இணைக்கக் கூடாது. தமக்கு பாதுகாப்பில்லை என்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். அல்லது அவர்களை வெளியேற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

தாம் ஒரு தீவிர தேசபக்தன் எனக் கூறிய விக்ரம், தன் தொகுதியில் 151 அடி உயர தேசிய கொடிக்கம்பம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது இந்த சர்ச்சைக்குரிய கருத்த அவர் கூறிய போது , முசாபர்நகர் மாவட்டத்தின் மேலும் மூன்று எம்எல்ஏக்களும் இருந்தனர்.

பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைக்குரிய கருத்து மீது கூறிய பாலிவுட் நடிகரும் உபி காங்கிரஸின் தலைவருமான ராஜ்பப்பர், விக்ரம் ஒரு தீவிரவாதியை போல் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்காக விக்ரம் மீது  தீவிரவாத வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் ராஜ்பப்பர் வலியுறுத்தி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in