Last Updated : 05 Jan, 2019 02:59 PM

 

Published : 05 Jan 2019 02:59 PM
Last Updated : 05 Jan 2019 02:59 PM

சபரிமலை விவகாரம்: பாஜக எம்.பி. இல்லம் மீது வெடிகுண்டுவீச்சு; ஆர்எஸ்எஸ் அலுவலகம் தீவைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இரு பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்த நிகழ்வைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாஜக, மார்க்சிஸ்ட் பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படுவதும், குண்டுவீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய நூற்றாண்டுகாலமாக அனுமதிக்கப்படுவதில்லை. இதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து வயத்துப்பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய முயன்ற இளம் பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிச்சென்றனர்.

இந்தச் சூழலில் கடந்த இரு நாட்களுக்கு முன் இரு பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர், நேற்று இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் சாமி தரிசனம் செய்தார். இவர்கள் அனைவருமே 50வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் சபரிமலைக் கோயிலுக்கு நுழைந்து சாமி தரினம் செய்ததைக் கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள் கடந்த இரு நாட்களாகப் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளாவில் நேற்றுமுன்தினம் பாஜக, இந்து அமைப்புகள் நடத்திய ஹர்தால் போராட்டத்தில் வன்முறை வெடித்து, 80-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதில் அதிகமாக கண்ணூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும் பதற்றமாக இருப்பதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணூர் மாவட்டம், தலச்சேரி அருகே மடபீடி பகுதியில் வசித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏல ஷம்ஷீர் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்று நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டுத் தப்பினார்கள்.

இந்த தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் காரணம் என்று மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஷம்ஷீர் குற்றண்சாட்டியுள்ளார்.

இந்த சூழலில் இன்று அதிகாலையில் கண்ணூர் மாவட்டம், தலச்சேரியில் உள்ள பாஜக மாநிலங்களவை எம்.பி. வி. முரளிதரன் இல்லத்தில் மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிச் சென்றனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து பாஜக எம்.பி. முரளிதரன் கூறுகையில், “ என்னுடைய வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, வீட்டில் என் சகோதரி, மருமகன், சகோதரியின் மகள் மட்டுமே இருந்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சபரிமலை விவகாரத்தில் மாவோயிஸ்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். ஆதலால், இதைத் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரிக்க வேண்டும். ” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியாரம் பகுதியில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அலுவலகம் தாக்கப்பட்டு, அங்குத் தீவைப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 1,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன என்பதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணூரில் கடந்த இரு நாட்களில்ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், “ அமைதிப்பேச்சுக்களை சீர்குலைத்து மாநிலத்தை கலவரபூமியாக மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் அரசு அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x