Last Updated : 01 Nov, 2018 08:56 AM

 

Published : 01 Nov 2018 08:56 AM
Last Updated : 01 Nov 2018 08:56 AM

18 தமிழக எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வெளியானதில் இருந்து 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்: மத்திய தேர்தல் ஆணையம் தகவல்

அதிமுகவில் தினகரன் அணியைச் சேர்ந்தவர்களைக் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த 18 தொகுதிகளில் எம்எல்ஏ பதவியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இவ்வாறு மாநில அரசின் அரசாணை வெளியிட்ட ஆறு மாதங்களுக்குள், காலியான தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்த்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சபாநாயகரின் மேற்கண்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, மத்திய தேர்தல் ஆணையமும் இடைத்தேர்தல் நடத்தும் பணியை நிறுத்தி வைத்திருந்தது. இந்த வழக்கில் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என கடந்த மாதம் 25-ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:

18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்கிறார்களா, இல்லையா என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை அளித்தால் மட்டுமே எங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடியும். அதுவரை, உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியான அக்டோபர் 25 முதல் ஆறு மாதம் கணக்கிட்டு அதற்குள் அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் இணைத்து அறிவிக்கப்படுவதாக இருந்த திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தலும் நிலுவையில் உள்ளன.

இதனுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் வாய்ப்புகள் குறைவு எனக் கருதப்படுகிறது. மேல்முறையீடு மனு அனுமதிக்கப்பட்டு தடை உத்தரவு கிடைக்காவிட்டால், 20 தொகுதிகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இல்லையெனில், நிலுவையில் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் டிசம்பரில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியும், அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த ஏ.கே.போஸும்மறைந்தததால் முறையே திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியானதாக தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. ஆதலால், இந்தத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x