

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் 7 லோக்சபா தொகுதிகளிலும் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தும், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக வெற்றியடையும் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் பாஜகதான் வெல்லும், ஆனால் 7 லோக்சபா தொகுதிகளிலும் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தி அதன் கடமையை நிறைவேற்றும்.
லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து பாஜகவை ஆம் ஆத்மி முறியடிக்கும் என்ற கணிப்பை கேஜ்ரிவால் தற்போது இவ்வாறு கூறி முறியடித்துள்ளார்.
சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், “பாஜகவை 7 தொகுதிகளிலும் வீழ்த்தி ஆம் ஆத்மி அதன் கடமையை நிறைவேற்றும்” என்றார்.
கடந்த லோக்சபா தேர்தலில், டெல்லியில் பாஜக 46% வாக்குகள் பெற்றது, ஆம் ஆத்மி 33% வாக்குகள் பெற்றது, காங்கிரஸ் 15% வாக்குகள் பெற்றது.
இந்நிலையில், “கருத்துக் கணிப்புகளின் படி பாஜக இம்முறை வாக்குகளில் 10%-ஐ இழக்கும், இந்த வாக்குகளை ஆம் ஆத்மிக்கு அளிக்கச் செய்யுமாறு நீங்கள் எடுத்துக் கூறினால் நாம் டெல்லியில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது பாஜக-வின் வெற்றி என்பதை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்” என்று தொண்டர்கள், நிர்வாகிகளிடையே கேஜ்ரிவால் கூறினார்.
2014-ல் மற்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் காங்கிரஸ் தோல்வியுற்றது, ஆனால் இம்முறை பிரதமர் நரேந்திர மோடியின், அமித் ஷா-வின் எதேச்சதிகாரத்தை அகற்ற வேண்டும் என்றார் கேஜ்ரிவால்.
ஆம் ஆத்மி தலைவர் தொகுதி வாரியாக தொண்டர்களைச் சந்தித்து பேசி வருகிறார்.
ஆனால் இவ்வளவுக்கும் பிறகும் காங்கிரஸுடன் கூட்டணி சாத்தியமாகக் கூடிய ஒன்றே என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.