Last Updated : 24 Jan, 2019 04:35 PM

 

Published : 24 Jan 2019 04:35 PM
Last Updated : 24 Jan 2019 04:35 PM

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்குப் பதிவு

ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கிய முறைகேட்டில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தாகோச்சார் மீது சிபிஐ இன்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

மேலும், சந்தா கோச்சாரின் கணவரும் 'என்யூபவர்' என்ற நிறுவனத்தின் தலைவருமான தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக இருந்தவர் சந்தா கோச்சார். சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் 'என்யூபவர்' பவர் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாயை வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் முதலீடு செய்தார்.

தனது கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு பிரதி உபகாரமாக சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்துக்குக் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.3,200 கோடி கடன் வழங்கி உதவி செய்தார்.

இந்தக் கடன் வழங்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளியே கசிந்தது. 2017-ம் ஆண்டு வரை இந்தக் கடனில் 85 சதவீதத்தை வீடியோகான் நிறுவனம் திருப்பிச் செலுத்தாமல் வாராக்கடனாக மாறியது.

இதையடுத்து, இந்த விவகாரம் ரிசர்வ் வங்கிக்கு வந்ததையடுத்து, ஐசிஐசிஐ வங்கி சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டதையடுத்து சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பப்பட்டார்.

அதன்பின் சிபிஐ அமைப்பும் முதல்கட்டமாகச் சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கிக் கடன் அளித்த விவகாரத்தில் இன்று சிபிஐ முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

அதுமட்டுமல்லால் மும்பை, அவுரங்காபாத் உள்ளிட்ட 4 இடங்களில் சந்தா கோச்சார் கணவரின் அலுவலகம், வீடியோகான் நிறுவனங்களிலும் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x