Last Updated : 03 Jan, 2019 11:44 AM

 

Published : 03 Jan 2019 11:44 AM
Last Updated : 03 Jan 2019 11:44 AM

உ.பி.யில் அர்ச்சகர் சுவாமி பிரேம்தாஸ் படுகொலை: பின்னணியில் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள்?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயில் அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டு ஒரு கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் கோயில் அர்ச்சகர் சுவாமி பிரேம்தாஸ் உடலை போலீஸார் இன்று கண்டெடுத்தனர்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்த விவரம்:

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டம், பாஸியாபாத் அருகே உள்ளது பாபா கி புர்வா கிராமம். இங்கு ராம் ஜான்கி கோயில் உள்ளது. இதன் அர்ச்சகராக ஸ்வாமி பிரேம்தாஸ் பணியாற்றி வந்தார். அவர் நேற்று முன்தினத்திலிருந்து காணாமல் போனார்.

நேற்று முன்தினமே பிரேம்தாஸ் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் இதில் நில ஆக்கிரமிப்பு கும்பல் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் மஹந்த் மவுனி பாபா என்பவர் புகார் அளித்திருந்தார்.

கோயிலுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படுவதில் சர்ச்சைக்கு உள்ளான பஜினத் மவுரியா உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில் நான்கு பேரால் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 64 வயது கோயில் அர்ச்சகரின் உடல் இன்று ஒரு கோயில் அருகே உள்ள கம்பம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

கோயில் அர்ச்சகராக இருந்த மவுர்யா  நில அபகரிப்புக் கும்பலில் ஒருவராக செயல்பட்டு வந்தார். அவரும் பிரேம்தாஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மவுனி பாபா, தனது புகாரில், கோயிலின் ஒரு பகுதி மீது ஆக்கிரமித்து, அங்கு கட்டுமானம் நடந்து கொண்டிருப்பதாகவும், நிலம் ஆக்கிரமிப்பாளர்களை தட்டிக்கேட்டதால் அவர் பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இக்கொலை சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் சுனில் சிங் தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x