

நாட்டின் 70-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப் படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். இதுதவிர, வாகனத் தணிக்கை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், முக்கியப் பிரமுகர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 3 ஆயிரம் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழாவை சீர்குலைப்பதற்காக டெல்லியின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகளை டெல்லி போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், லாஜ்பாத் நகர் மார்க்கெட், ஹஜ் மன்சில், இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் டெல்லி ராஜபாதையில் உச்சகட்ட மாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜபாதை அமைந்திருக்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத் தினரும், தேசிய பாதுகாப்புப் படையினரும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்தப் பகுதியில் அனுமதியின்றி பறக்கும் விமானங் களை சுட்டு வீழ்த்துவதற்காக அதிநவீன துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்களும் தயார் நிலையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.