

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியபோதும் அதிலிருந்து பத்திரமாக விமான ஓட்டி உயிர்தப்பி மீண்டு வந்த சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தரப் பிரதேசத்தில் இன்று காலை ஜாகுவார் போர்விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. அவ் விமானம் திடீரென எதிர்பாராத விபத்துக்குள்ளாகி குஷிநகர் அருகே தரையில் விழுந்து நொறுங்கியது.
இவ்விபத்து சம்பவத்திற்கு பிறகு விமானத்தை ஓட்டிச்சென்ற பைலட் விங் கமாண்டர் ரோஹித் கடோக் என்று அடையாளங் காணப்பட்டுள்ளார்.
எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்த விமானத்திலிருந்து பத்திரமாக பைலட் ரோஹித் வெளியேறியுள்ளார்.
இவ்விபத்து குறித்து விசாரிக்க ராணுவ நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும், விபத்துக்குள்ளான இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ஜெட் விமானத்தில் கோரக்பூர் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டபோதே சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும், கோரக்பூர் விமானத்தளத்திற்கு திரும்பவும் விமானத்தை கொண்டுசென்று தரையிறக்கும் நோக்கத்தோடு செல்லும்வழியில் குஷிநகர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.