

குருவிளங்காட்டில் பிஷப் தன்னைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரி உட்பட 5 பேர், தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பாதிக்கப்பட்ட சக கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும், பிஷப் பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராகவும் போராடிய ஐவரில் நால்வர், குருவிளங்காடு கான்வென்ட்டில் இருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர்.
கன்னியாஸ்திரி அனுபமா கேலமங்கலது வெளியில் பஞ்சாப்பில் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கன்னியாஸ்திரி அங்கிதா உரும்பில் கன்னூரில் உள்ள பரியாரம் பகுதியிலும் கன்னியாஸ்திரி ஆல்பி பல்லச்சேரில் பிஹாரில் பணிபுரிய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. கன்னியாஸ்திரி ஜோசபைன் வில்லூன்னிக்கல் ஜார்கண்ட் செல்லப் பணிக்கப்பட்டார்.
தனித்தனியாக எழுதப்பட்டுள்ள அக்கடிதங்களில், முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் பலாத்கார வழக்கு முடியும்வரையில், இடமாற்ற உத்தரவை நிறுத்திவைத்து, குருவிளங்காடு கான்வென்ட்டிலேயே தாங்கள் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இடமாற்ற உத்தரவுக்கு உள்ளாகாத கன்னியாஸ்திரி நீனா ரோஸும் வருங்காலத்தில் இடமாற்றம் செய்யப்படாமல் காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிஷப் பிராங்கோவிடம் இருந்து தாங்கள் மிரட்டலை எதிர்கொண்டதாகவும் கான்வென்ட் அதிகாரிகள் அவருக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிராங்கோ தன்னைக் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரியும் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''சக ஊழியர்களான கன்னியாஸ்திரிகள் எனக்கு பக்கபலமாக இருந்து, உணர்வுபூர்வமாக ஆறுதல் அளித்தனர். மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட எந்தத் தேவைகளையும் கான்வென்ட் அதிகாரிகள் வழங்க மறுத்தனர்'' என்று கூறியுள்ளார்.
முதல்வருக்கு மட்டுமல்லாது மாநில டிஜிபி லோக்நாத் பெஹ்ரா மற்றும் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஆகியோருக்கும் இக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பிஷப் பிராங்கோ தற்போது ஜாமீனில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.