

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் 93-வது பிறந்த நாள் நேற்று கொண்டாப்பட்டது. இதையொட்டி மும்பையை சேர்ந்த சேத்தன் ரவத் என்ற கலைஞர் 33,000 ருத்திராட்சங்களை பயன்படுத்தி பால் தாக்கரேவின் உருவத்தை வரைந்துள்ளார். இந்தப் படைப்பு மும்பையில் சிவசேனா பவனுக்கு முன் நேற்று முன்தினம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக சேத்தன் ரவத் கூறும்போது, “ருத்திராட்சங்கள் மீது பால் தாக்கரே மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் அதை பயன்படுத்தி அவரது உருவத்தை வரைந்தேன். 8 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட இந்தப் படைப்பில் 33,000 ருத்திராட்சங்களை பயன்படுத்தியுள்ளேன். இதன் மூலம் உலக சாதனை ஏற்படுத்த முயன்றேன்” என்றார்.
இந்தப் படைப்பில் ருத்திராட்ச மணிகளை சேத்தன் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி முப்பரிமாண வடிவம் (3டி) கொடுத்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.இதனிடையே மத்திய மும்பை, தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் பால் தாக்கரேவுக்கு நினைவிடம் கட்ட நேற்று விக்னேஸ்வர பூஜை மற்றும் பூமி பூஜை நடைபெற்றது. இதில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் ஒன்றாக பங்கேற்றனர்.
கூட்டணிக் கட்சிகளான பாஜக – சிவசேனா இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 11,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் 1928-ல் கட்டப்பட்ட மும்பை மேயர் பங்களா உள்ளது. இந்த இடம், நினைவக கட்டுமானப் பணிகளை கண்காணிக்கும் அறக்கட்டளையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, இங்கு ரூ.100 கோடியில் நினைவிடம் கட்ட மாநில அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இது சிவசேனாவிடம் பாஜக நெருங்கிவரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பால் தாக்கரே பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுத்துள்ள செய்தியில், “மக்களின் நலன் மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தாக்கரே உறுதியுடன் செயல்பட்டார். துணிவும், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் கொண்டவர். லட்சக்கணக்கான மக்களை தனது பேச்சாற்றலால் ஈர்த்தவர் அவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.33 ஆயிரம் ருத்திராட்சங்களில் உருவாக்கப்பட்ட பால் தாக்கரே ஓவியம்.