Published : 16 Jan 2019 11:42 AM
Last Updated : 16 Jan 2019 11:42 AM

ஒடிசாவில் திருமணம் செய்த 2 இளம்பெண்கள்; பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்

ஒடிசாவின் கேந்திரபாரா பகுதியில் இளம்பெண்கள் இருவர் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சட்டபூர்வமாகத் திருமணம் செய்ததாக தங்களின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

மணப்பெண்களில் ஒருவரின் தந்தை, மாயாஜால வேலைகளால் தனது மகளை மயக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பட்டாமுண்டாய் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

ஸ்ரீராம்பூரைச் சேர்ந்த மோனாலிசா நாயக் மற்றும் மஹாகலப்படா பகுதியைச் சேர்ந்த சாவித்ரி பரிடா இருவரும் நீண்டகால நண்பர்கள். கட்டாக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்த இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இதையறிந்த இருவரின் பெற்றோரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காவல் துறையில் புகார் அளித்தனர். சாவித்ரியையும் மோனாலிசாவையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ முடிவு செய்தது தெரியவந்தது.

இதுகுறித்துப் பேசிய ஜோடி, ''நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ ஆசைப்படுகிறோம். அதற்காகத் திருமணமும் செய்து கொண்டோம். ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக் கொள்வோம். இதுகுறித்துப் பெற்றோர் கவலை கொள்ளத் தேவையில்லை.

நாங்கள் மைனர் கிடையாது. திருமணம் செய்துகொள்ளக் கூறி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. எங்களை யாராவது பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்துகொள்வோம்'' என்று தெரிவித்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி, தன் பாலின ஈர்ப்பு குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x