

குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரமில் இன்று நடந்த 70-வது குடியரசு தின நிகழ்ச்சியை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணித்தனர்.
இதனால் ஏறக்குறைய மக்கள் இல்லா, வெறும் மைதானத்தில் ஆளுநர் கும்மணம் ராஜசேகர் குடியரசு தின உரை நிகழ்த்த வேண்டிய தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார். அதிகாரிகள், அமைச்சர்கள், அரசுப் பணியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர், பொதுமக்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.
குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மிசோரம் மாநிலம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றும் மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70-வது குடியரசு தின நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி அனைத்து சமூக நல அமைப்புகளும் மக்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன. அதன்படி இன்றைய நிகழ்ச்சியில் எந்தவிதமான மக்களும் பங்கேற்கவில்லை.
ஆனால், மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் 6 படைகளின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
மிசோரம் மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியையும் மக்கள், அதிகாரிகள் சிலரும் புறக்கணித்தனர்.
ஆனால், குடியரசு தின நிகழ்ச்சிக்கு எதிராக எந்தவிதமான போராட்டமும், கறுப்புக்கொடியோ இல்லாமல், அமைதியான முறையில் மக்கள் புறக்கணிப்பு செய்ததால், எந்தவிதமான பதற்றமும் இன்றி நிகழ்ச்சிகள் நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.