

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு வழிபாட்டு உரிமை அளிககப்பட வேண்டும் என போராடி வரும் பெண்களுக்கு, புத்தாண்டில் புதிய வெற்றி கிடைத்து இருப்பதாக பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் கூறியுள்ளார்.
அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் கூறுகையில் ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண் - பெண் பாலின பாகுபாட்டை நீக்க வேண்டும், பெண்களுக்கு வழிபாட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். பெண்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. புத்தாண்டில் பெண்களுக்கு புது வெற்றி கிடைத்துள்ளது’’ எனக் கூறினார்.
திருப்தி தேசாய் மற்றும் அவரது அமைப்பைச் சேர்ந்த சக ஆர்வலர்களும் கடந்த நவம்பரில் புனேயில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்து சபரிமலை செல்ல முற்பட்டனர். ஆனால் விமான நிலையத்தை சுற்றி சூழ்ந்து பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையில், சபரிமலைக்கு செல்ல முடியாமல் திருப்தி தேசாய் புனே திரும்பியது குறிப்பிடத்தக்கது.