

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான சாட்டர்ஜி சர்வதேச மையத்தில் இன்று காலை பயங்கர தீ பற்றியது. கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள மிகவும் பழமையான சாட்டர்ஜி சர்வதேச மைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 15 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில், 12 மற்றும் 15 ஆவது அடுக்குகளுக்கு இடையே தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தளத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
5- க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் தீயை அணைத்து வருகின்றனர். இதுவரை 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கானக் காரணம் அறியப்படவில்லை. சேதம் குறித்த தகவல்களும் உடனடியாக தெரியவில்லை. உள்ளே சிக்கியுள்ள மக்கள், தாங்கள் உள்ளே இருப்பதை தெரியப்படுத்துவதற்காக, பொருட்களை அள்ளி வேளியே வீசியுள்ளனர்.
இதனை அடுத்து கட்டிடத்தினுள் உள்ளே மக்கள் சிக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, ஹைட்ராலிக் ஏணிகளை கொண்டு மக்களை வெளியேற்றும் பணியை தீயணைப்புத் துறை வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.