

மகாராஷ்டிராவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக இறந்ததாக போலிச் சான்றிதழ்கள் தயாரிப்பதில் ஈடுபட்ட மும்பையைச் மோசடிக் கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
நீண்ட நாட்களாக இம்மோசடியில் ஈடுபட்டு வந்த இரு மருத்துவர்கள், ஒரு நகராட்சி சுடுகாட்டு ஊழியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு வந்த கல்யாண் குடியிருப்பைச் சார்ந்த சந்திரகாந்த் நரசிம்மலு ஷிண்டே என்பவரை கண்டுபிடித்த தானே குற்றவியல் காவல் பிரிவின் மூத்த காவல் ஆய்வாளர் சஞ்சு ஜான் இதுகுறித்து தெரிவித்த விவரம்:
இது போன்ற போலி இறப்புச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் ரூ.81 லட்சம் பெற்றுள்ளனர்.
ஷிண்டே முதலில் தேஜ்பால் ராம்வீர் மெஹ்ரோல் என்பவருடன் தொடர்பு கொண்டிருந்தார், தானே அருகிலுள்ள மும்ரா நகராட்சி சுடுகாட்டில் பணியாற்றிவரும் மெஹ்ரோல் அதே பகுதியில் உள்ள அப்துல் மொஹித் சித்திக் மற்றும் இம்ரான் சித்திக் ஆகிய மருத்துவர்களிடமிருந்து போலி இறப்புச் சான்றிதழ் பெற்றுத் தரும் வேலையை செய்துவந்தார்.
இம் மருத்துவர்கள் இதுவரை 13 பேருக்கு அவர்கள் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ்கள் அளித்துள்ளனர். இதில் 10 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
இதில் முக்கிய குற்றவாளியான ஷிண்டே என்பவர்தான் முதலில் போலி இறப்பு சான்றிதழ்கள் மூலம் தன்னுடைய உறவினர் சிலருக்கு முழுமையான ஆயுள்காப்பீட்டுப் பணத்தை பெற்றுத் தந்தபிறகு, இந்த மோசடியில் துணிகரத்தோடு ஈடுபடத் தொடங்கினார். குறிப்பிட்ட அவரது உறவினர்கள் தற்போது உயிருடன் உள்ளனர்.
விசாரணையில் இதுவரை ரூ.81 லட்சம் பணம் பெற்றுத் தந்துள்ளதாகவும் மேலும் ரூ.55 லட்சம் தொகை அளவில் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் தெரியவந்தது.
விசாரணையில், ஷிண்டே தெரிவித்துள்ளபடி, அவரது இரு உறவினர்களில் ஒருவர் லஷ்மி ஷிண்டே மற்றும் ஒருவர் அப்பெண்ணின் கணவர் நாராயணன் ஷிண்டே ஆகியோரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி இறப்புச் சான்றிதழ் பெற்றுத் தருவதற்கு மெஹ்ரோல் பெரும் சன்மானம் தலா ஒரு சான்றிதழுக்கு ரூ.15 ஆயிரம் ஆகும். இப்பணத்தில் ஒவ்வொரு போலி சான்றிதழுக்கும் டாக்டர்கள் பெறும் பணம் ரூ.2 ஆயிரம் மட்டுமே. இதில் சம்பந்தட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். இம் மோசடிக்கு தொடர்பு உள்ள தானே நகராட்சி அலுவலகத்தைச் செர்ந்த இன்னும் பலரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் வித்தால்வாடி காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஏமாற்றுதல் மற்றும் மோசடி பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மூத்த காவல் ஆய்வாளர் சஞ்சு ஜான் தெரிவித்தார்.