ஜீரோவும் ஜீரோவும் சேர்ந்தால் ஜீரோதான்: பிரியங்கா காந்தி அரசியல் நுழைவை கிண்டலடித்த யோகி ஆதித்யநாத்

ஜீரோவும் ஜீரோவும் சேர்ந்தால் ஜீரோதான்: பிரியங்கா காந்தி அரசியல் நுழைவை கிண்டலடித்த யோகி ஆதித்யநாத்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி,  அக்கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது அரசியல் நுழைவு குறித்து உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கிண்டலடித்துள்ளார்.

நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை வருகிற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இப்போதே அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தொகுதியான வாரணாசியில் அவருக்கு எதிராகவே பிரியங்கா வத்ராவை நிறுத்தவேண்டும் என்று உ.பி.காங்கிரஸார் விரும்புவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

மேலும் கிழக்கு உ.பி.யின் தலைமையாக பிரியங்கா நியமிக்கப்பட்டதையடுத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரும் அங்குதான் வருகிறது.

இந்நிலையில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரியங்காவின் நேரடி அரசியல் நுழைவு குறித்து கூறியதாவது:

பிரியங்கா நுழைவு எங்கும் கொண்டு போகாது. பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே. காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஜீரோ அதில் யார் சேர்ந்தாலும் ஒன்றும் ஆகாது. அதிலிருந்து ஒன்றும் வராது.

பாஜக பிரியங்கா வருகையில் பதற்றமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர், பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி  தெரிவிக்கும்போது, ‘ஊழல் கறை படிந்த வாழ்க்கைத்துணையைக் கொண்ட பெண்’ என்றார்.

பிஹாரின் பாஜக அமைச்சர் விநோத் நாராயண் ஜா, பாலின ரீதியாக பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக ‘அழகான முகம் இருந்தால் வாக்குகள் வந்து விடுமா?’ என்று பேசினார்.

இந்தப் பட்டியலில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது காங்கிரஸ் ஒரு பெரிய ஜீரோ, ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்தா ஜீரோதானே என்று கேட்டு கிண்டலடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in