

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை அவதூறாப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏ சாதனாவுக்கு நோட்டீஸ் அனுப்பத் தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.
லக்னோவில் நடந்த கூட்டத்தில் முகல்சாரே தொகுதியின் பெண் எம்எல்ஏ சாதனா சிங் நேற்று பேசினார். அப்போது மாயாவதியை கடுமையான சொற்களாலும், அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் விமர்சித்தார். அவர் பேசியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு சுயமரியாதை என்பதே கிடையாது. ஏற்கனவே அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர். மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார், இப்போது தனது சுயமரியாதையையும் அதிகாரத்துக்காக விற்கத் துணிந்துவிட்டார். மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை. இவ்வாறு சாதனா சிங் பேசினார்.
இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.இதை தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட தேசிய மகளிர் ஆணையம், மயாவதி குறித்து அவதூறாகப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், “ ஒரு கட்சியின் தலைவரை ஒரு பெண்ணை பற்றி மற்றொரு பெண் இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பது ஏற்க முடியாது, கண்டிக்கத்தக்கது. இதே தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டுள்ளது. பாஜக எம்எல்ஏ சாதனா சிங்குக்கு நாளை அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்” எனத் தெரிவித்தார்.